நாடு முழுவதும் குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன! – குடியரசுத் தலைவர்.

இமாச்சலப்பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின்  முதலாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு இன்று பங்கேற்றார். அப்போது உரையாற்றிய அவர், மருத்துவப் பணியின் முக்கிய நோக்கம் மனிதசமூகத்திற்குச் சேவை செய்வது என்று கூறினார். மருத்துவர்களின் திறமை நோயைக் குணப்படுத்துவதுடன், அவர்களின் அன்பும் கருணையுமே நோயாளிகளுக்கு மன தைரியத்தை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

குறைந்த செலவில் தரமான சிகிச்சை அளிப்பதே எய்ம்ஸின் தனி அடையாளம் என்றும் மக்கள் அதன்மீது வைத்துள்ள நம்பிக்கையை நிலைநாட்டவும், தகுதியான மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்கவும் நாடு முழுவதும் பல எய்ம்ஸ் நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புவியியல் அமைப்பால் பிலாஸ்பூர் எய்ம்ஸுக்குக் கூடுதல் பொறுப்பு உள்ளதாக தெரிவித்த அவர். தொலைதூர மலைப்பகுதி மக்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க தொலைமருத்துவம், நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் நோய்களுக்கான சிகிச்சைச் செலவைக் குறைக்க, மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கி ஏழைகளுக்கு  உதவுவதாக அவர் கூறினார்.

மருத்துவ உபகரணங்கள், மருந்துகளின் விலை உயர்வு ஆகியவை நோயாளிகளுக்குப் பெரும் சுமையாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், குறைந்த விலையிலான, பயனுள்ள மருத்துவத் தீர்வுகளை உருவாக்குவது நமது கூட்டுப் பொறுப்பாகும் என்று தெரிவித்தார். இதன் மூலம் நாட்டு மக்கள் ஆரோக்கியத்துடன் நாட்டின் வளர்ச்சிக்கு உதவ முடியும் என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார்.

Leave a Reply