மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் கேஜெபி21 என்ற சிறுத்தை பாதுகாப்புடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த சிறுத்தை 5 குட்டிகளை ஈன்றுள்ளது. புதிதாக பிறந்த சிறுத்தைக் குட்டிகள் அனைத்தும் ஆரோக்கியமாக உள்ளன. இதன்மூலம் இந்தியாவில் பிறந்த சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய சுற்றுச்சூழல் வன, பருவநிலைமாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், முகி, கேஜிபி12 ஆகிய சிறுத்தைகளுக்குப் பிறகு அதிக குட்டிகளை ஈன்ற இந்திய வம்சாவளி சிறுத்தை என்ற பெயரை கேஜெபி21 சிறுத்தை பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது இந்தியாவின் அடுத்தத் தலைமுறை சிறுத்தைகள் உருவாக்கத்திற்கு மைல்கல்லாக அமைந்துள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுத்தைக் குட்டிகளின் தந்தை போட்ஸ்வானா இனத்தை சேர்ந்தது என குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், சிறுத்தையை நன்கு பராமரித்த கால்நடை மருத்துவர்கள், களப்பணியாளர்கள், பூங்கா மேலாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். இவர்களின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.
எம்.பிரபாகரன்
