புதுதில்லியில் நடைபெற்ற பாரத் சர்வதேச மருத்துவக் கண்காட்சியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று சஞ்சீவனி 2026 நிகழ்வை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து இந்திய மருத்துவத் துறைக் குறித்து பேசிய அவர், நமது நாட்டில் உலகத்தரத்திலான சிகிச்சை அளிக்க சிறந்த சூழலும், நிபுணத்துவம் வாய்ந்த பணியாளர்களும் அவசியம் என வலியுறுத்தியுனார். சிகிச்சை அளிப்பதில் வெளிப்படை தன்மையைக் கடைபிடித்தால், வெளிநாட்டினருக்கு இந்தியா மீது நம்பிக்கை ஏற்படும் எனவும் கூறினார். மருத்துவமனைகள் நோயாளிகளை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டால், நம்பகத்தன்மையை இந்தியா இழந்துவிடும் என்றும் குறிப்பிட்டார்.
இந்திய மருத்துவத்துறை மீது நம்பிக்கைக் கொண்டு ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பாவை சேர்ந்த ஏராளமானோர் இங்கு வருகைதந்து சிகிச்சை பெறுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். சிறந்த மருத்துவமனைகள், நவீன மருத்துவ உபகரணங்களை கொண்ட நமது நாட்டில், மற்ற நாடுகளைக் காட்டிலும் மருத்துவக் கட்டணம் 60 முதல் 80 சதவீதம் குறைவாக உள்ளது என்றும் அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிட்டார். மருத்துவச் சுற்றுலா திட்டத்தின் கீழ், கடந்த 7 ஆண்டுகளில் 35 லட்சம் பேர் சிகிச்சைப்பெற்றுள்ள நிலையில், இதை ஆண்டுதோறும் ஒரு கோடி பேர் என்ற இலக்குடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆயுர்வேத சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கேரளாவில் பிரபலமாக விளங்கும் ஆயுர்வேத சிகிச்சை, மற்ற மாநிலங்களிலும் தற்போது அதிகளவில் பின்பற்றப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
எஸ்.சதிஸ் சர்மா
