உஸ்பெகிஸ்தான் அதிபருடன் இருதரப்பு உறவுகள் குறித்துப் பிரதமர் நரேந்திர மோதி அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தை.

PM at Press Statements in Tashkent, Uzbekistan on August 30, 2026.

உஸ்பெகிஸ்தானுக்கான தமது அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (30.08.2026) உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு ஷவ்கத் மிர்சியோயேவுடன் அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தை நடத்தினார். குக்சராய் அதிபர் மாளிகைக்கு வருகை தந்த பிரதமரை, அதிபர் மிர்சியோயேவ் அன்புடன் வரவேற்று, பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார். உஸ்பெகிஸ்தானின் 35-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இரு தலைவர்களும் வர்த்தகம், முதலீடு, புத்தாக்கம், புத்தொழில் நிறுவனங்கள், டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு, யுபிஐ, பாதுகாப்பு, சுகாதாரம், மருந்துத் தயாரிப்பு, முக்கியக் கனிமங்கள், வேளாண்மை, கல்வி, சுற்றுலா, விண்வெளி மற்றும் இரு நாட்டு மக்களிடையேயான தொடர்புகள் உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்கள் குறித்தும் தூதுக்குழு அளவில் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர். உஸ்பெகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு யுரேனியம் வழங்குவதற்கான நீண்டகால ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பிரதமர் பாராட்டினார். மேலும் முக்கியக் கனிமங்கள் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் அவசியத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார். இரு நாடுகளின் உறவின் ஆழத்தையும் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கும் வகையில், இருதரப்பு ஒத்துழைப்பை விரிவான உத்திசார் ஒத்துழைப்பு நிலைக்கு உயர்த்த இரு தலைவர்களும் முடிவு செய்தனர். மேலும், 2030-ம் ஆண்டுக்குள் 5 பில்லியன் அமெரிக்க டாலர் இருதரப்பு வர்த்தக இலக்கை எட்டவும், பொருளாதார-முதலீட்டு உறவுகளை ஆழப்படுத்த வணிக உச்சிமாநாட்டை நடத்தவும் ஒப்புக்கொண்டனர். விரிவான உத்திசார் ஒத்துழைப்பை அர்த்தமுள்ள வகையில் முன்னெடுத்துச் செல்ல, வெளியுறவு அமைச்சர்கள் அளவிலான புதிய கட்டமைப்பு ஒன்றை உருவாக்கவும், அரசுகளுக்கிடையேயான கூட்டாணையத்தை அமைச்சர்கள் நிலைக்கு உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது.

பண்டைய நாகரிகத் தொடர்புகளும், தற்காலத் தொடர்புகளும் இந்த நல்லுறவுக்குத் தொடர்ந்து புத்துயிர் அளித்து வருவதாகத் தலைவர்கள் குறிப்பிட்டனர். உஸ்பெகிஸ்தானில் யோகாவின் பிரபலத்தைப் பிரதமர் பாராட்டினார். முன்னதாக, உஸ்பெகிஸ்தான் யோகா கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த யோகா அமர்வைப் பிரதமர் பார்வையிட்டார். மறைந்த முன்னாள் பிரதமர் திரு லால் பகதூர் சாஸ்திரியின் 60-வது நினைவு ஆண்டை முன்னிட்டு, உஸ்பெக் மாணவர்களுக்காக இந்தி மொழிக்கான ‘லால் பகதூர் சாஸ்திரி கல்வி உதவித்தொகைத் திட்டத்தைப்’ பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தார். உஸ்பெகிஸ்தானின் ‘யாஷில் மாகோன்’ பசுமை முன்முயற்சிக்கும், இந்தியாவின் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமையைச் சுட்டிக்காட்டிய பிரதமர், ஆரல் கடல் பகுதியில் நடைபெற்று வரும் சுற்றுச்சூழல் சீரமைப்பு திட்டங்களுக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர் மானிய உதவியை இந்தியா வழங்கும் என அறிவித்தார். இரு தலைவர்களும் இணைந்து அரண்மனைத் தோட்டத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டனர்.

பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, கலாச்சாரம், உயர்கல்வி, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு, ஆவணக் காப்பகங்கள், பொருளாதார ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல், சுற்றுலா, சுரங்கம், ஆயுர்வேதம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஆவணங்களும் இரு தரப்பினரிடையே பரிமாறிக்கொள்ளப்பட்டன. உஸ்பெகிஸ்தானில் உள்ள பயாஸ் தேபா, காரா தேபா ஆகிய பௌத்தத் தலங்களைப் புனரமைப்பதற்கான விருப்பக் கடிதம் இறுதி செய்யப்பட்டது. தாஷ்கண்ட் பல்கலைக்கழகத்தில் இந்திய கலாச்சார உறவுகள் குழு சார்பில் சமஸ்கிருத இருக்கை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் இறுதி செய்யப்பட்டது.

உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு மிர்சியோயேவ் அளித்த விருந்தில் கலந்துகொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரது கனிவான விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்ததுடன், இந்தியாவிற்கு வருகை தருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.

Leave a Reply