உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ள 405 முக்கிய உபகரணங்கள் அடங்கிய 6-வது பட்டியலைப் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறை வெளியிட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பிற்காக ரூ.3,070 கோடி வர்த்தக மதிப்பில் உள்நாட்டிலேயே தயாரிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள 405 முக்கிய உபகரணங்கள் அடங்கிய 6-வது பட்டியலைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் உதிரி பாகங்கள், மூலப்பொருட்கள் உள்ளிட்டவைகள் அடங்கும். இதில் இந்தியக் கடலோர காவல் படையின் 16 பொருட்களும், பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்களின் 389 பொருட்களும் இடம் பெற்றுள்ளன. இந்தப் பொருட்கள் பல்வேறு வகையான பாதுகாப்புத் தளங்கள், அமைப்புகளைச் சேர்ந்தவையாகும்.

இவற்றில் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர், இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர், எஸ்யூ-30 எம்கேஐ, இலகுரக போர் விமானம், ஏஎல்-31 எஃப்பி இயந்திரம் போன்ற வான்வளித் தளங்கள், டி-72, டி-90, பிஎம்பி-2 உள்ளிட்ட கவச வாகனங்கள், போர்க் கப்பல்கள், கொன்கூர்ஸ்-எம், இன்வார், எம்ஆர்எஸ்ஏஎம் போன்ற ஏவுகனை அமைப்புகள், ரேடார்கள், தீயணைப்பு உபகரணங்கள், செயற்கைக்கோள், தகவல்தொடர்பு அமைப்புகள் உள்ளிட்ட பாதுகாப்பு மின்னணு சாதனங்கள், இதர முக்கியப் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை அடங்கும். இப்பொருட்கள் குறித்த விரிவான பட்டியல் ஸ்ரீஜன் இணையதளத்தில் (srijandefence.gov.in) இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பொருளுக்கும் உள்நாட்டு உற்பத்திக்கான உத்தேசமிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே பொருட்கள் தயாரிக்கப்பட்ட பிறகு இந்தியத் தொழில்துறையினரிடமிருந்து கொள்முதல் செய்யப்படும். பாதுகாப்புத்துறை, பொதுத்துறை நிறுவனங்கள், இந்தியக் கடலோரக் காவல் படை ஆகியவை தொழில்துறை (எம்எஸ்எம்இ) பங்கேற்புடன் தங்களுடைய நடைமுறை உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் மூலம் இந்த உள்நாட்டு உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும்.

தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் கீழ் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் தற்சார்பை ஊக்குவிக்கும் அரசின் முயற்சிகளில் இந்த 6-வது பட்டியல் மற்றொரு முக்கிய நடவடிக்கை ஆகும்.

Leave a Reply