நீட் தேர்வை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது என நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய்; இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக முன்னேறவும், அனைத்துத் தரப்பு மக்களை உள்ளடக்கிய வளர்ச்சியாகவும் அமைந்திட செயல்படுத்தப்படும் திட்டங்களை முழு மனதோடு வரவேற்போம். மேலும், அதிகாரமளிக்கப்பட்ட மாநிலங்கள், கூட்டுறவுக் கூட்டாட்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் மூலமாக மட்டுமே வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்று தமிழ்நாடு உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளது.
வெளிப்படையான நிர்வாகம், சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் சமச்சீரான முன்னேற்றம் ஆகிய அடிப்படைக் கொள்கைகளை முன்னிறுத்தி, தமிழ்நாட்டு மக்கள் எங்கள் அரசுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளனர். அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாட்டின் நலன்களையும் மக்களின் விருப்பங்களையும் உறுதியாகப் பாதுகாக்கும் வேளையில், ஒன்றிய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு எங்கள் அரசு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
கே.பி.சுகுமார்
