மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரிகளுடன் பயணிகளுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பை ஆய்வு செய்தார்; அணுகல் கட்டுப்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சீர்திருத்தங்களை காலவரையறைக்குள் அமல்படுத்த உத்தரவிட்டார்.

பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, ரயில் நிலைய அணுகல், பயணிகளுக்கான வசதி மேம்பாடுகள் மற்றும் பிற பாதுகாப்பு தொடர்பான வலுவூட்டல்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பீடு செய்ய, மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் இன்று ரயில் பவனில் மூத்த ரயில்வே அதிகாரிகளுடன் ஒரு விரிவான ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அணுகல் கட்டுப்பாடு, கூட்ட மேலாண்மை, தொழில்நுட்பம் சார்ந்த கண்காணிப்பு மற்றும் ரயில் நிலைய வளாகத்திற்குள் எளிதான நடமாட்டம் போன்ற நடவடிக்கைகளில் இந்தக் கூட்டம் கவனம் செலுத்தியது. இந்தச் சீர்திருத்தங்கள் முதலில் புது தில்லி ரயில் நிலையத்தில் செயல்படுத்தப்படும். இதிலிருந்து பெறப்பட்ட பாடங்களின் அடிப்படையில், பின்னர் மற்ற ரயில் நிலையங்களுக்கும் இவை விரிவுபடுத்தப்படும்.

24 மணி நேரக் கண்காணிப்பை உறுதிசெய்ய செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் கேமரா வலையமைப்பு

புது தில்லி ரயில் நிலையத்தில், கேமராக்கள் மூலம் விரிவான செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பு செயல்படுத்தப்பட உள்ளது. இது நடைமேடைகள், பயணிகள் கூடம், நுழைவு-வெளியேறும் இடங்கள் மற்றும் அனுமதியற்ற நுழைவுக்கு வாய்ப்புள்ள வழித்தடங்கள் உள்ளிட்ட நிலைய வளாகத்தின் அனைத்து மூலைகளையும் உள்ளடக்கும்.

விதிவிலக்கு நிகழ்வு காட்சி (Exception Event Display) அடிப்படையிலான ஒரு கட்டுப்பாட்டு அறை நிறுவப்படும். அங்கு, நேரலைக் கேமரா காட்சிகளை செயற்கை நுண்ணறிவு (AI) செயலாக்குவதன் மூலம், அசாதாரணமான அல்லது பாதுகாப்பற்ற நிகழ்வுகள் குறித்து கண்காணிப்புப் பணியாளர்களுக்கு உடனுக்குடன் எச்சரிக்கை செய்யப்படும். மத்திய அமைச்சர், கேமராக்களை இந்த அமைப்பின் ‘கண்கள்’ என்றும், செயற்கை நுண்ணறிவை ‘மூளை’ என்றும் வர்ணித்ததோடு, அதிகபட்ச கண்காணிப்புத் திறனை உறுதிசெய்ய, அனைத்து கேமரா கண்காணிப்புப் பகுதிகளும் போதுமான வெளிச்சத்துடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நேரடிச் சோதனையிலிருந்து கண்காணிப்பு அடிப்படையிலான முறைக்கு மாறுவதோடு, பயணச்சீட்டு பெற்ற பயணிகள் மட்டுமே ரயில் நிலைய வளாகத்திற்குள் நுழைவதை உறுதி செய்வதற்காக, ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) கூடுதலாகப் பணியில் ஈடுபடுத்தப்படும்.

அனைத்து நிலைய ஊழியர்களுக்கும் வண்ணக் குறியீட்டு சீருடைகள் மற்றும் அடையாள அட்டைகள்

பெரிய பணியாளர் குழு மத்தியில் சீரான தன்மையையும் பொறுப்புணர்வையும் ஏற்படுத்துவதற்காக, நிலையத்தில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் வண்ணக் குறியீட்டு அடையாள முறை ஒன்று செயல்படுத்தப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்கள் ஒளிரும் மேலங்கிகளை அணிவார்கள், அதே சமயம் விற்பனையாளர்கள், நிலைய உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியரல்லாதவர்கள் வேறு ஏதேனும் ஒரு வண்ணத்தில் வண்ணக் குறியீட்டு மேலங்கிகளை அணிவார்கள். பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பயணச்சீட்டுச் சோதனைப் பணியாளர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது தொடர்பு கொள்ளும், நிலைய வளாகத்தில் இருக்கும் பயணிகள், ஊழியர்கள் மற்றும் சுமைதூக்குபவர்கள், விற்பனையாளர்களின் பணியாளர்கள், உணவு, துப்புரவு, பொதி மற்றும் பராமரிப்புப் பணியாளர்கள் போன்ற ஊழியரல்லாதவர்களை விரைவாக அடையாளம் காண்பதை சாத்தியமாக்குவதற்காக இது செய்யப்படுகிறது.

அடையாள நோக்கத்திற்காகத் தேவைப்படும் விரிவான விவரங்களுடன், அனைத்து ஊழியர்களுக்கும் ஊழியரல்லாதவர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்படும். இந்த சீரான அடையாள முறை, புது தில்லி நிலையத்தை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு, வடக்கு மண்டலத்தின் அனைத்து நிலையங்களிலும் படிப்படியாகவும், பின்னர் நாட்டின் பிற பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் நோக்கம் கொண்டது.

புது தில்லி ரயில் நிலையத்தில் கியூஆர் குறியீடு அடிப்படையிலான அணுகல் கட்டுப்பாட்டு முறை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படவுள்ளது.

தீபாவளி மற்றும் சத் பண்டிகைகளின் போது எதிர்பார்க்கப்படும் கூட்ட நெரிசலை முன்னிட்டு, புது தில்லி ரயில் நிலையத்தில் ஒரு முன்னோட்டத் திட்டமாக கியூஆர் குறியீடு அடிப்படையிலான நுழைவு மேலாண்மை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த அமைப்பு, செல்லுபடியாகும் பயணச்சீட்டுகளின் அடிப்படையில் நுழைவை ஒழுங்குபடுத்தி, முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள், மாதாந்திர பருவக்கால பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் மற்றும் முன்பதிவு செய்யப்படாத பயணிகளைத் தெளிவாகப் பிரித்து அறிய உதவும்.

தடையற்ற இறுதிக்கட்ட இணைப்புக்காக RailOne செயலி பாரத் டாக்ஸியுடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளது.

புது தில்லி ரயில் நிலையத்திற்கு வரும் அல்லது அங்கிருந்து புறப்படும் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், ரெயில்ஒன் செயலி பாரத் டாக்ஸியுடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. ரெயில்டெல் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்படும் இந்த ஒருங்கிணைப்பின் நோக்கம், ரயில் நிலைய வளாகத்திற்கு வெளியே ஏற்படும் குழப்பங்களைக் குறைப்பதும், பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைப்பதும், நம்பகமான மற்றும் வெளிப்படையான இறுதிக்கட்டப் போக்குவரத்து வசதியை வழங்குவதும் ஆகும்.

பாரத் டாக்ஸி என்பது இந்தியாவின் முதல் கூட்டுறவு அடிப்படையிலான பயண முன்பதிவுத் தளமாகும். ‘சஹ்கர் சே சம்ரித்தி’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய, குடிமக்களை மையமாகக் கொண்ட போக்குவரத்துத் தீர்வுகளை ஊக்குவிக்கவும் இந்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

தடையற்ற கூட்ட மேலாண்மையை உறுதி செய்வதற்கான காத்திருப்புப் பகுதிகள்

76 ரயில் நிலையங்களில் உள்ள காத்திருப்புப் பகுதிகளின் மேம்பாட்டு நிலை குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. முன்பதிவு செய்யாத பயணிகளுக்காக, நிலையக் கட்டிடத்திற்கு வெளியே பிரத்யேக காத்திருப்புப் பகுதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இது, நடைமேடைகளுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட, படிப்படியான அணுகலை உறுதி செய்வதோடு, வரலாற்று ரீதியாக நெரிசல் மற்றும் பாதுகாப்பு அபாயங்களுக்கு வழிவகுத்த நடைபாதைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலையும் தடுக்கிறது. பயணிகள் தடையின்றிச் செல்வதற்காக, காத்திருப்புப் பகுதி வழியாக இந்த பிரத்யேக நுழைவுப் புள்ளிகள் பயன்படுத்தப்படும்.

அனைத்து நிலையங்களிலும், முன்பதிவு செய்த மற்றும் முன்பதிவு செய்யாத பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் இருவருக்கும் தெளிவாகவும் நன்கு தெரியும் வகையிலும் அடையாளப் பலகைகளை மேம்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் ஒதுக்கப்பட்ட காத்திருப்புப் பகுதிகளில் காத்திருக்கும்போது அவர்களுக்குச் சிறந்த முறையில் தகவல் அளிக்கும் வகையில், ரயில் தகவல் சேவைகள் மேம்படுத்தப்பட உள்ளன. ரயில் வலையமைப்பு முழுவதும் அதிகப் பயணிகள் வந்துசெல்லும் நிலையங்களில் பயணிகளின் வசதியில் நீடித்த முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக, ரயில்வே அமைச்சகத்தின் நேரடிக் கண்காணிப்பு தொடரும்.

இந்த நடவடிக்கைகள், நாட்டின் மிகவும் பரபரப்பான ரயில் நிலையங்களைப் பாதுகாப்பான, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் பயணிகளுக்கு உகந்த இடங்களாக மாற்றுவதில் இந்திய ரயில்வேயின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன. தொழில்நுட்பத்தையும், மேம்படுத்தப்பட்ட பௌதீக உள்கட்டமைப்பையும் ஒருங்கிணைப்பதன் மூலம், தினமும் தனது சேவைகளைச் சார்ந்துள்ள லட்சக்கணக்கான பயணிகளுக்கு, ரயில் நிலைய நுழைவாயில் முதல் இறுதி இணைப்பு வரை ஒரு தடையற்ற பயண அனுபவத்தை வழங்குவதை ரயில்வே நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply