வேறு வழி இல்லாமல் சசிகலாவுடன் கூட்டணிச் சேர்ந்த மருத்துவர் ராமதாஸ்!

வி.கே. சசிகலாவுடன் இன்று (20 மார்ச் 2026) தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் செய்து கொண்ட மருத்துவர் ராமதாஸ்.

ஒரு காலத்தில் தமிழக அரசியலில் சிம்ம சொப்பனமாக இருந்து வந்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். சமீப காலமாக அவரது மகனும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான மருத்துவர் அன்புமணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக குடும்ப பிரச்னையாக இருந்து வந்த சில விரும்பத்தகாத சம்பவங்கள், நாளடைவில் அதிகாரப் போட்டியாக உருவெடுத்து பாமக கட்சிக்கு யார் தலைவர்? என்ற மிகப்பெரிய சிக்கல்கள் உருவாகி இரு கோஷ்டிகளாக பிரிந்து அடிதடி, வம்பு, வழக்கு, தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்களில் உரிமைப் போராட்டம்..! இப்படி கன்னித்தீவுக் கதையாக நீண்டு கொண்டே போனது. நகத்தில் கிள்ளி எறிய வேண்டிய ஒரு பிரச்சனையை, பல மாதங்களாக கோடாரிப் போட்டு பிளந்ததின் விளைவு பாமக இரண்டு குழுக்களாக பிரிந்துப் போனது. இதனால் பாமக நிர்வாகிகளும், தொண்டர்களும் யாரை ஆதரிப்பது? யாரை எதிர்ப்பது? என்ற குழப்பத்தில் சிக்கி சின்னா பின்னாமாகிப் போனார்கள்.

மருத்துவர் ராமதாஸும், மருத்துவர் அன்புமணியும் எப்படியாவது சமாதானமாகி கட்சி இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று உண்மையான பாமக தொண்டர்களும், நிர்வாகிகளும் நினைத்துக் கொண்டிருக்க, சமயம் பார்த்து காத்திருந்த ஒரு சிலர் எக்காரணத்தை முன்னிட்டும் மருத்துவர் ராமதாஸும், மருத்துவர் அன்புமணியும் சமாதானம் ஆகிவிடக் கூடாது என்ற கெட்ட நோக்கத்தில் தவறான தகவல்களையும், ஆசை வார்த்தைகளையும், வழிகாட்டுதலையும் முன்னெடுத்ததின் விளைவு 30 ஆண்டுகளுக்கு மேலாக கட்டிக் காக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் எதிர்காலம் மிகப்பெரிய சிக்கலுக்கு உள்ளானது.

பாமக கட்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு அடிப்படையில் குடும்ப பிரச்னைதான் காரணம் என்றாலும், இந்தப் பிரச்னைக்கு தூபம் போட்டு இதை அணைந்து விடாமல் பார்த்துக் கொண்டதில் மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சி இருக்கிறது என்பதை இங்கு மறுப்பதற்கு இல்லை.

இரு மனங்களுக்கும் இடையிலும், நான்கு சுவர்களுக்கு நடுவிலும் ரகசியமாக பேசி தீர்க்க வேண்டிய தனிப்பட்ட குடும்ப பிரச்னைகளை எல்லாம் மருத்துவர் ராமதாஸ் பொதுவெளியில் ஊடககாரர்கள் முன்னிலையில் கொட்டித் தீர்த்ததின் விளைவு மருத்துவர் அன்புமணிக்கு இது ஆறாத ரணமாக மாறிப்போனது.

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி.

இவற்றின் விளைவு சட்டரீதியாக பாட்டாளி மக்கள் கட்சியை கைப்பற்றும் முயற்சியில் மருத்துவர் அன்புமணி தீவிரமாக களம் இறங்கினார். அதில் அவர் வெற்றியும் பெற்றார்.

“மகன் செத்தாலும் பரவாயில்லை; மருமகள் தாலியருக்க வேண்டும்” என்ற பழமொழிக்கு ஏற்ப மருத்துவர் ராமதாஸ் மற்றவர்களின் சொல்பேச்சு கேட்டு பிடிவாதமாக செயல்பட்ட காரணத்தால் தமிழக அரசியலில் மருத்துவர் ராமதாஸ் இன்று தனி மரமாகிப் போனார். ஆம், அவர் நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்றாக மாறிப் போனது.

இன்று வேறு வழி இலலாமல் வி.கே. சசிகலா தலைமையிலான தேர்தல் கூட்டணியில் மருத்துவர் ராமதாஸ் இணைந்துள்ளார். இது விரும்பி எடுக்கப்பட்ட முடிவு அல்ல; வேறு வழியில்லாமல் எடுக்கப்பட்ட முடிவு என்று மருத்துவர் ராமதாஸ் ஆதரவாளர்கள் புலம்பி தவிக்கின்றனர்.

நீரடித்து நீர் விலகாது! ஆம் அப்பன் – மகன் உறவு என்றும் விட்டுப் போகாது. தேர்தல் முடிந்த பிறகு கிடைக்கும் அனுபவங்களை வைத்து மருத்துவர் ராமதாஸும், மருத்துவர் அன்புமணியும் தங்களது கசப்பான முடிவுகளை மறுபரிசீலனை செய்து இருவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும். அதுதான் அவர்களுக்கும், அவர்களை நம்பி இருக்கும் தொண்டர்களுக்கும் நல்லது.

Leave a Reply