தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தின் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் அட்டவணையையும், 6 மாநிலங்களில் இடைத்தேர்தல்களையும் கடந்த 15-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.
5 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் பல்வேறு கட்டமாக நடைபெறவிருக்கும் தேர்தல்களில் சுமூகமான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக, 25 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்தல் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இது ஒவ்வொரு 70 வாக்காளர்களுக்கும் கிட்டத்தட்ட ஒரு தேர்தல் அதிகாரிக்கு சமமாகும்.
தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார் தேர்தலின் அட்டவணையை அறிவித்தபோது, தேர்தல்கள் வன்முறையற்றதாகவும், தூண்டுதல் இல்லாததாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக பாரபட்சமற்ற முறையில் செயல்பட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, இதனால் ஒவ்வொரு வாக்காளரும் அச்சமோ விருப்பு, வெறுப்போ இல்லாமல் வாக்களிக்க முடியும் என்று கூறினார்.
இதில் சுமார் 15 லட்சம் வாக்குப்பதிவு பணியாளர்கள், 8.5 லட்சம் பாதுகாப்பு பணியாளர்கள், 40 ஆயிரம் வாக்கு எண்ணிக்கை பணியாளர்கள், 49 ஆயிரம் நுண் பார்வையாளர்கள், 21 ஆயிரம் துறை அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கைக்கான 15 ஆயிரம் நுண் பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்
2.18 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் உள்ளிட்ட கள அளவிலான தேர்தல் அலுவலர்களை வாக்காளர்கள் தொலைபேசி அழைப்பிலும், ECINet செயலியில் புக்-ஏ-கால் டு பி. எல். ஓ வசதி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். மாவட்ட தேர்தல் அதிகாரி / தேர்தல் நடத்தும் அதிகாரி மட்டத்தில் எந்தவொரு புகாரையும் பதிவு செய்ய அழைப்பு மைய எண் + 91 (STD) 1950 கிடைக்கிறது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 28- ஏ விதிகளின்படி, பணியமர்த்தப்பட்ட அனைத்து பணியாளர்களும் தேர்தல் ஆணையத்திற்கு பிரதிநிதியாக கருதப்படுவார்கள்.
பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத் தேர்தல்களின் போது ஆணையத்தின் கண் மற்றும் காதுகளாக செயல்பட 832 சட்டமன்றத் தொகுதிகளில் 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 557 பொதுக் கண்காணிப்பாளர்கள், 188 காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 366 செலவுக் கண்காணிப்பாளர்கள் அடங்குவர். பணியமர்த்தப்பட்ட பெரும்பாலான மத்திய பார்வையாளர்கள் ஏற்கனவே அந்தந்த நியமிக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிகளை அடைந்துள்ளனர்.
பார்வையாளர்கள் தங்கள் தொடர்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் அல்லது எந்தவொரு பொது உறுப்பினரையும் சந்தித்து அவர்களின் தேர்தல் தொடர்பான குறைகளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கேட்பார்கள்.
எம்.பிரபாகரன்
