சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆறு மாநிலங்களுக்கு 1,111 மத்திய பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள 832 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 557 பொதுப் பார்வையாளர்களும், 188 காவல்துறை பார்வையாளர்களும், 366 செலவினப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு 136 பொது பார்வையாளர்களும், 40 காவல்துறை பார்வையாளர்களும் 151 செலவினப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு 17 பொதுப் பார்வையாளர்களும், 4 காவல்துறை பார்வையாளர்களும், 17 செலவினப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 2026 மார்ச் 18-க்குள் (நாளை) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு செல்லுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பார்வையாளர்கள் அங்கு சென்றதும், தங்களுடைய தொடர்பு விவரங்களை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவார்கள். மேலும், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் அல்லது அவற்றின் பிரதிநிதிகள், அல்லது பொதுமக்கள் என யாரேனும் ஒருவரைச் சந்தித்து, தேர்தல் தொடர்பான அவர்களின் குறைகளைக் கேட்டறிய, நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் அவர்கள் நிர்ணயிப்பார்கள்.
திவாஹர்
