எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்ய டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்த நுகர்வோருக்கு அறிவுறுத்தல்.

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு மேற்கொண்டுள்ள தயார்நிலை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. இவை எரிசக்தி விநியோக மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகள், அந்தப் பிராந்தியத்தில் உள்ள இந்திய மக்களின் நலன் தொடர்பானவை.

எரிபொருள் கிடைக்கும் தன்மை:

நாடு முழுவதும் பெட்ரோலியப் பொருட்கள், எல்பிஜி தேவையான அளவில் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வழக்கமான விநியோகத்தை பராமரிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போதைய நிலை பின்வருமாறு:

கச்சா எண்ணெய்/சுத்திகரிப்பு நிலையங்கள்:

அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் அதிக திறனில் இயங்கி வருகின்றன. போதுமான கச்சா எண்ணெய் இருப்புக்களை அவை பராமரிக்கின்றன.

சில்லறை விற்பனை நிலையங்கள்:

சில்லறை விற்பனை நிலையங்களில் எரிபொருள் இல்லை என்று எந்த புகாரும் இல்லை. மேலும் பெட்ரோல், டீசல் விநியோகம் தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் போதுமான அளவு பெட்ரோல், டீசல் இருப்பு இருப்பதால், மக்கள் பீதியடைந்து பொருட்களை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இயற்கை எரிவாயு:

முக்கிய நகர்ப்புறங்களில் உள்ள வணிக எல்பிஜி நுகர்வோர் பிஎன்ஜி இணைப்புகளைத் தேர்வுசெய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். மின்னஞ்சல், கடிதம் அல்லது நகர எரிவாயு விநியோக (CGD) நிறுவனங்களின் வாடிக்கையாளர் தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

எல்பிஜி:

நிலவும் புவிசார் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எல்பிஜி விநியோகம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

எல்பிஜி முன்பதிவுகள் சரிவைக் காட்டியுள்ளன. மார்ச் 13, 2026 அன்று 88.8 லட்சம் முன்பதிவுகளுடன் ஒப்பிடும்போது நேற்று சுமார் 77 லட்சம் முன்பதிவுகள் பதிவாகியுள்ளன.

மாநில அரசுகளால் நடத்தப்படும் கூட்டங்கள்:

பெட்ரோல், டீசல், எல்பிஜி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை கண்காணிப்பதில் மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கின்றன.

எல்பிஜி விநியோகத்தை ஆய்வு செய்யவும், விநியோகத்தின் தொடர்ச்சியை உறுதி செய்யவும், கள்ளச் சந்தைப்படுத்தல், பீதியடைந்து செய்யப்படும் முன்பதிவுகளைத் தடுக்கவும் பல மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உயர் மட்டக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

22 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் நிலைமையைக் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறைகளை நிறுவியுள்ளன. பல மாநிலங்கள் மக்களுக்குத் தகவல் தெரிவிக்க ஊடக சந்திப்புகளையும் நடத்தி வருகின்றன.

அமலாக்க நடவடிக்கை:

பெட்ரோல், டீசல், எல்பிஜி ஆகியவற்றின் பதுக்கல், கள்ளச் சந்தைப்படுத்தலைத் தடுக்க மாநில அரசுகள் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

எல்பிஜி சிலிண்டர்களின் பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தைப்படுத்தலைத் தடுக்க ஆந்திரா, பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சீரான விநியோகத்தை உறுதி செய்வதற்கும் முறைகேடுகளைத் தடுப்பதற்கும் பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் அதிகாரிகள் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற நடவடிக்கைகள்:

அரசு, வீட்டு நுகர்வோரின் நலன்களுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து, தடையற்ற எல்பிஜி விநியோகத்தை உறுதி செய்கிறது. குறிப்பாக வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற முன்னுரிமைத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக, முன்பதிவு இடைவெளிகள் நகர்ப்புறங்களில் 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் குறைக்கப்பட்டுள்ளன.

மாற்று எரிபொருள் தேவைகளை ஆதரிப்பதற்காக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக 48,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு அறிவுறுத்தல்:

வீடுகள் மற்றும் அத்தியாவசியத் துறைகளுக்கு போதுமான எல்பிஜி கிடைப்பதை உறுதி செய்ய உறுதிபூண்டிருப்பதால், மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மக்கள் முடிந்தவரை பிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களைத் தேர்வுசெய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

கடல்சார் பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகள்:

மேற்கு ஆசியப் பகுதியில் இயங்கும் இந்தியக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடல்சார் நடவடிக்கைகளை சீராக செயல்படுத்துவதற்கு கப்பல் அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளுடன் ஒருங்கிணைப்பு பராமரிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் உள்ள அனைத்து இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்திய மாலுமிகள் சம்பந்தப்பட்ட எந்த கப்பல் சம்பவமும் பதிவாகவில்லை.

தற்போது, பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் மேற்கே 611 மாலுமிகளுடன் 22 இந்தியக் கப்பல்கள் உள்ளன. கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறது.

டிஜி ஷிப்பிங் கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டதிலிருந்து, தகவல் மற்றும் உதவியை நாடும் கடற்படையினர், அவர்களது குடும்பத்தினர் மற்றும் கடல்சார் பங்குதாரர்களிடமிருந்து 2,995 தொலைபேசி அழைப்புகள் மற்றும் 5,357-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் கையாளப்பட்டுள்ளன.

டிஜி ஷிப்பிங் நிறுவனம், வளைகுடா பிராந்தியத்தில் இருந்து இதுவரை 276 இந்திய மாலுமிகளைப் பாதுகாப்பாக திருப்பி அனுப்ப உதவியுள்ளது, இதில் கடந்த 24 மணி நேரத்தில் விமான நிலையங்கள் மற்றும் பிராந்திய இடங்களில் இருந்து 23 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கடல்சார் சூழ்நிலையின் மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள துறைமுகங்கள் கப்பல் நகர்வுகள் மற்றும் சரக்கு நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.

முந்தைய சம்பவங்களில், துரதிர்ஷ்டவசமாக ஐந்து இந்தியர்கள் தற்போதைய மோதலில் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு இந்தியரைக் இன்னும் காணவில்லை. காணாமல் போன நபர் தொடர்பாகவும், இறந்தவரின் உடலை விரைவில் தாயகம் கொண்டு வருவதற்காகவும் ஓமன், ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளன.

சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை மத்திய அரசு தொடர்ந்து பராமரித்து வருகிறது. முக்கிய துறைகளில் தயார்நிலையை உறுதி செய்வதற்கும் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

Leave a Reply