குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (மார்ச் 12, 2026) புதுதில்லியில் நடைபெற்ற வேளாண் உணவு முறைகளில் பெண்களின் பங்கு குறித்த உலகளாவிய மாநாட்டின் (GCWAS-2026) தொடக்க அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், விதைப்பு, அறுவடை, பதப்படுத்துதல், பயிர்களை சந்தைகளுக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட அனைத்து விவசாய நடவடிக்கைகளிலும் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றார். மீன்பிடித்தல், தேனீ வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, வன விளைபொருட்களை முறையாகப் பயன்படுத்துதல், விவசாயம் சார்ந்த நிறுவனங்களை நடத்துதல் உள்ளிட்ட பல துறைகளிலும் பெண்கள் அயராது உழைக்கிறார்கள் என்று அவர் கூறினார். விவசாயப் பொருளாதாரத்திற்கு பெண்கள் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்குகிறார்கள் என அவர் குறிப்பிட்டார்.
மாநில வேளாண் பல்கலைக்கழகங்களில் மொத்த மாணவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்களாக உள்ளனர் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். இந்தப் பெண்கள் சிறந்த கல்வித் திறனை வெளிப்படுத்துகிறார்கள் எனவும், விவசாயம், உணவு தானியத் துறைகளில் இந்த நம்பிக்கைக்குரிய பெண்கள் தலைமை வகிக்க அதிக ஆதரவும் ஊக்கமும் வழங்கப்பட வேண்டியது அனைத்துத் தரப்பினரின் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் சபை 2026-ம் ஆண்டை ‘சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டு’ என்று அறிவித்துள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். பாலின இடைவெளிகளைக் குறைப்பதற்கும், வேளாண்-உணவு மதிப்புச் சங்கிலிகளில் பெண்களுக்கான தலைமைப் பொறுப்புகளை ஊக்குவிப்பதற்கும் இந்தப் பிரகடனம் அழைப்பு விடுக்கிறது இன்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.
திவாஹர்
