இந்தியாவின் விண்வெளி மற்றும் அணுசக்தி சாதனைகளை விளக்கும் கண்காட்சியை டாக்டர் ஜிதேந்திர சிங் பார்வையிட்டார்.

விண்வெளி, அணுசக்தி மற்றும் முக்கியத் தாதுக்கள் குறித்த இந்தியாவின் சாதனைகளை விளக்கும் கண்காட்சியை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று பார்வையிட்டார். இத்தகைய கண்காட்சிகள் மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டி, அவர்களின் தனித்திறனைக் கண்டறிய உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கண்காட்சியில் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி , ஜி.எஸ்.எல்.வி  மற்றும் எல்.வி.எம்-3 ஆகிய ராக்கெட்டுகளின் சிறப்புகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுதல் திட்டங்களின் சாதனைகள் விளக்கப்பட்டன. குறிப்பாக, மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் மற்றும் இந்தியாவின் விண்வெளி நிலையமான ‘பாரதிய விண்வெளி மையம்’ அமைப்பதற்கான நீண்ட காலத் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

அணுசக்தித் துறையில் இந்தியாவின் மூன்று கட்ட அணுசக்தித் திட்டம் மற்றும் தோரியம் வளங்களைப் பயன்படுத்தும் உத்திகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஜார்க்கண்ட், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள யுரேனிய வளங்கள் மற்றும் இந்தியாவின் 11,000 கி.மீ கடற்கரைப் பகுதியில் உள்ள இல்மனைட், சிர்கான் போன்ற முக்கியத் தாதுக்களின் இருப்பு குறித்தும் தகவல்கள் இடம்பெற்றன.

நாட்டின் வளர்ந்து வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவும், குறைந்த கார்பன் ஆற்றல் மற்றும் தொழில்நுட்பத் தற்சார்பை அடையவும் விண்வெளி மற்றும் அணுசக்தித் துறைகள் மிக முக்கியத் தூண்களாகத் திகழ்வதாக அமைச்சர் தெரிவித்தார். இக்கண்காட்சியைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply