சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.28.25 கோடியில் முடிவுற்ற 3 பணிகள், சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.4.23 கோடியில் முடிவுற்ற 3 பணிகள் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில், ரூ.12.48 கோடியில் மேம்படுத்தப்பட்ட கழிவுநீர் உந்துநிலையங்களை இன்று காலை கொளத்தூர் தொகுதியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று திறந்துவைத்தார்.
மேலும், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ், பெரம்பூர் நெடுஞ்சாலையில் ரூ.4.20 கோடியில் மேம்படுத்தப்பட்ட முரசொலி மாறன் பூங்கா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நாணய நினைவுத் தூணையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தற்போது இந்த முரசொலி மாறன் பூங்காவில் பொலிவூட்டப்பட்ட நுழைவாயில், இசை நீரூற்று, பார்வையாளர் இருக்கை வசதியுடன் கூடிய சறுக்கு வளையம், நீண்ட நடைபாதை, நிழலாடும் நடைபாதை வசதிகள், தோட்டங்கள் மற்றும் கூரையுடன் கூடிய திறந்தவெளி அமைப்புகள் யோகா மையம், 2 எண்ணிக்கையில் பேட்மிண்டன் கோர்ட், சிறுவர்களுக்கான உடற்பயிற்சி உபகரணங்கள் உள்பட பல்வேறு சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
எஸ்.திவ்யா
