மிசோரம் பல்கலைக்கழகத்தின் 20-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உரையாற்றினார்.

குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (07.03.2026) ஐஸ்வாலில் உள்ள மிசோரம் பல்கலைக்கழகத்தின் 20-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்தி, 2047-ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

மிசோரம் பல்கலைக்கழகம் மிக அழகான வளாகங்களில் ஒன்றாகும் என்றும், கல்வியால் பலவற்றை சாதிக்க முடியும் என்பதற்கான அடையாளமாக இது நிற்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த பத்து ஆண்டுகளில் வடகிழக்குப் பகுதியின் மாற்றத்தை எடுத்துரைத்த அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், இந்தப் பகுதி இந்தியாவின் வளர்ச்சிக் கதையின் முக்கிய அம்சமாக மாறியுள்ளது என்று கூறினார். மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து இணைப்பு, வளர்ச்சியை துரிதப்படுத்தி, இப்பகுதி மக்களுக்குப் புதிய வாய்ப்புகளை கொண்டுவருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையை வலியுறுத்திய அவர், இளைஞர்கள் வேலைகளைத் தேடுவதைத் தாண்டி, வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். சுற்றுலா, மூங்கில் சார்ந்த தொழில்கள், இயற்கை வேளாண்மை, கைவினைப்பொருட்கள், டிஜிட்டல் சேவைகள் போன்ற துறைகளில் வடகிழக்குப் பகுதி இளைஞர்களின் மகத்தான ஆற்றலை அவர் எடுத்துரைத்தார்.

இளைஞர்கள் போதைப்பொருட்களிலிருந்து விலகி ஒழுக்கமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொழில்நுட்பத்தையும் சமூக ஊடகங்களையும் பொறுப்புடன் பயன்படுத்துமாறும், தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக மாறுமாறும் மாணவர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

பட்டமளிப்பு விழாவில் மிசோரம் ஆளுநர் திரு விஜய் குமார் சிங், மிசோரம் முதலமைச்சர் திரு லால்துஹோமா, மிசோரம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திபக்கர் சந்திர தேகா, பேராசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply