ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 தயார் நிலை பணிகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்.

2026 செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை ஜப்பானில் உள்ள ஐச்சி – நகோயாவில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுகள் 2026-க்கான இந்தியாவின் தயார் நிலை பணிகள் குறித்து இந்திய விளையாட்டு ஆணைய தலைமையகத்தில் இன்று நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்திற்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார். இந்திய வீரர்களின் தயார்நிலை பணிகள் குறித்து விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் மூத்த அதிகாரிகள், பங்குதாரர்கள் டாக்டர் மண்டாவியாவிடம் எடுத்துரைத்தனர். ஆசியா கண்டத்தின் விளையாட்டுப் போட்டியில் சிறந்து விளங்க சாத்தியமான அனைத்து உதவிகளையும் விளையாட்டு வீரர்கள் பெறுவார்கள் என அமைச்சர் உறுதியளித்தார்.

பயிற்சி, விளையாட்டு வீரர்கள் நலன், போக்குவரத்து, போட்டிக்கான தயார்நிலை ஆகியவற்றிற்கு திட்டமிட டிசம்பர் 2025 முதல் ஏற்கனவே நான்கு கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சக செயலாளர் திரு ஹரி ரஞ்சன் ராவ், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி டி உஷா, ஆசிய விளையாட்டுகள் தயார் நிலை குழுவின் தலைவர் திரு சஹ்தேவ் யாதவ், துணைத்தலைவர் திரு சரத் கமல் உட்பட 15 உறுப்பினர் குழுவினர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, நமது விளையாட்டு வீரர்கள் நமக்கு உயர் முன்னுரிமை உள்ளவர்கள் என்றும், பயிற்சி, போக்குவரத்து, உபகரணங்கள், உணவு, மருத்துவம் உட்பட அனைத்து நிலைகளிலும் ஒவ்வொருவருக்கும் சாத்தியமான உதவி வழங்கப்படும் என்றும் கூறினார்.

கட்டமைப்பான தயாரிப்பு, வலுவான உதவி நடைமுறைகள், உரிய கால திட்டமிடல் ஆகியவை 2026 ஆசிய விளையாட்டுகளில் புதிய வரலாறு படைக்க இந்தியாவுக்கு உதவுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார்.

2022-ல் ஹாங்சூ ஆசிய விளையாட்டுகளில் பெற்ற 106 பதக்கங்களைக் கடந்து இந்த முறை பதக்கங்கள் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 400-க்கும் அதிகமான விளையாட்டுப் பிரிவுகளில் சுமார் 700 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

அடுத்த குழுக் கூட்டம் மார்ச் 20 அன்று நடைபெறவுள்ளது. இது இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் வீரர்களின் அளவு, பயண ஏற்பாடுகள், செயல்பாட்டுத் தயார்நிலை, போக்குவரத்து ஆகியவை குறித்து இறுதி விவாதங்கள் நடத்தப்படும்.   

Leave a Reply