பல்வேறு சிறப்புப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் 26 இளம் மருத்துவ நிபுணர்களுக்கு மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் விருதுகளை வழங்கினார்.

மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், நாடு முழுவதிலுமிருந்து, புற்றுநோயியல், குழந்தை மருத்துவம், நாளமில்லா சுரப்பியியல், எலும்பியல், அவசர மருத்துவம் போன்ற பல்வேறு சிறப்பு மருத்துவப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் 26 இளம் மருத்துவ நிபுணர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த ஊடக நிறுவனத்தைப் பாராட்டிய டாக்டர் ஜிதேந்திர சிங், தங்கள் தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் உள்ள இத்தகைய மருத்துவர்களுக்கு விருது வழங்கும் முடிவைப் பாராட்டினார். இந்த கட்டத்தில் விருது என்பது அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அங்கீகாரத்தையும் ஊக்கத்தையும் வழங்கும் என்று கூறினார். நாட்டின் சுகாதார சேவைகளை வலுப்படுத்த, இளம் மருத்துவர்களை அங்கீகரிப்பது முக்கியம் என்று அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்வில் வழங்கப்பட்ட பல கௌரவங்கள், இளம் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டதற்கு திருப்தி தெரிவித்தார். விருதுகளைப் பற்றிக் குறிப்பிட்ட அமைச்சர், திறமைகளை தொடக்கத்திலேயே அங்கீகரிப்பது அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் அர்ப்பணிப்புடன் சமூகத்திற்கு தொடர்ந்து பங்களிக்க ஊக்கமளிக்கும் என்று குறிப்பிட்டார்.

மருத்துவ நடைமுறைகளில் மாறிவரும் தன்மைகள் குறித்துப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், புதிய தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றால் சுகாதாரத் துறை புரட்சிகரமான மாற்றத்திற்கு உள்ளாகி வருவதாகக் கூறினார். நோயறிதல், சிகிச்சை ஆகியவற்றை தொழில்நுட்பம் கணிசமாக மேம்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இளம் மருத்துவர்கள் ஒரு குறிப்பிட்ட மருத்துவ நிபுணத்துவத்தில் கவனம் செலுத்தி, தொடர்ந்து தங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்ட இளம் மருத்துவர்கள்  தங்கள் வாழ்க்கையில் மேலும் பல முக்கிய மைல்கற்களை அடைய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வாழ்த்துத் தெரிவித்தார்.

Leave a Reply