கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் யதூரில் இன்று நடைபெற்ற ஸ்ரீ வீரபத்ரேஸ்வர் கோயில் மகா கும்பாபிஷேகம் மற்றும் கலச பிரதிஷ்டை நிகழ்வில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், பாரதம் என்பது ஒரு தேசம் மட்டுமல்ல, உயிரோட்டமான நாகரீகமும், சிந்து சமவெளி பள்ளத்தாக்கு முதல் கன்னியாகுமரி வரை தொடர்ச்சியான உணர்வோட்டமும் ஆகும் என்றார். காலத்தால் அழியாத ஞானத்தை தருகின்ற வேதங்கள் முதலில் ஒலித்த புனித பூமி இது என்று குறிப்பிட்ட அவர், துணிவுடன் செயல்படுவதற்கும், நேர்மையுடன் வாழ்வதற்கும், இறைவனிடம் சரணவடைவதற்கும் மனிதகுலத்திற்கு தொடர்ச்சியாக வழிகாட்டுகின்ற பகவத் கீதை பிறந்த இடமும் இதுதான் என்றார்.
இந்து என்ற உணர்வு சடங்குகள், சம்பிரதாயங்களோடு மட்டுப்படுவது அல்ல, இது ஒரு வாழ்க்கைமுறை என்று தெரிவித்த குடியரசு துணைத்தலைவர், உலகம் ஒரு குடும்பம் என்ற பொருள்படுகின்ற காலத்தால் அழியாத “வசுதைவ குடும்பகம்” தத்துவத்தை எடுத்துரைத்தார். இந்திய ஆன்மீக கண்ணோட்டம் என்பது இயற்கையிலும், ஒவ்வொரு மனிதரிடத்திலும் தெய்வீகத்தை காண்பதாகும்.
தினசரி வழிபாடு, சடங்குகள், புதுப்பித்தல் பணிகள், ஆன்மீக சேவைகள் போன்றவற்றைப் பாதுகாக்க ஸ்ரீ கடசித்தேஸ்வர் மடத்தின் குரு சன்னிதானங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட இடைவிடாத முயற்சிகளை அவர் பாராட்டினார். பாரம்பரியமும், வளர்ச்சியும் கைக்கோர்த்து செல்ல வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை சுட்டிக்காட்டிய குடியரசு துணைத்தலைவர், பாரதம் இப்போது தொழில்நுட்ப ரீதியில் முன்னேறி வருகிறது. பொருளாதார ரீதியில் வலுவாக உள்ளது. உலக அளவில் செல்வாக்குமிக்க நாடாக உள்ளது என்றார்.
இந்த நிகழ்வில் கர்நாடகா ஆளுநர் திரு தாவர்சந்த் கெலாட், கர்நாடக பெரு மற்றும் நடுத்தர தொழில்கள், அடிப்படைக் கட்டமைப்புத்துறை அமைச்சர் திரு எம் பி பாட்டில், ஸ்ரீசைல ஜகத்குரு சன்ன சித்தராம பண்டிதராதிய சிவாச்சாரியார் சுவாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
எம்.பிரபாகரன்
