பொருளாதார வளர்ச்சியை நீடிக்கச் செய்தல் மற்றும் வலுப்படுத்துதல் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.

பொருளாதார வளர்ச்சியை நீடிக்கச் செய்தல் மற்றும் வலுப்படுத்துதல் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இரண்டாம் கட்ட இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். முதலாவது இணையவழிக் கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெற்றது என்று குறிப்பிட்ட பிரதமர், பட்ஜெட் அம்சங்களை அமல்படுத்துவது தொடர்பாக மிகச் சிறந்த ஆலோசனைகள் அதில் பெறப்பட்டதாக தெரிவித்தார்.

“அதிக கட்டமைப்பு, அதிக உற்பத்தி, அதிக இணைப்பு, அதிக ஏற்றுமதி” என்ற மந்திரங்களை வலியுறுத்திய பிரதமர் அரசின் தெளிவான தொலைநோக்குப் பார்வையையும் தீர்மானத்தையும்  உறுதி செய்தார். பொருள் உற்பத்தி, பொருள் போக்குவரத்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நகர்ப்புற மையங்கள் ஆகியவை தனிப்பட்டவை அல்ல, ஒற்றைப் பொருளாதார கட்டமைப்பின்  ஒருங்கிணைக்கப்பட்ட தூண்கள் அவை என்று பிரதமர் விவரித்தார்.

கொள்கை வழிகாட்டுதல் மட்டும் பயன்களைத் தராது என்று எச்சரித்த பிரதமர், தொழில்துறை, நிதி நிறுவனங்கள், மாநில அரசுகள் ஆகியவற்றின் தீவிர பங்கேற்பு இல்லாமல் நல்ல விளைவுகள் இருக்காது என்றார். பொருள் உற்பத்தி அதிகரிப்பு, உற்பத்தி மற்றும் செலவு என்பது போட்டித் தன்மையோடு இருப்பது குறித்த விவாதங்களுக்கு பங்கேற்பாளர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். இந்தத் திசையில் உங்களின் ஆலோசனைகள் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடையும் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை என்ற திரு மேோடி கூறினார்.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பேசிய பிரதமர், இந்த ஒப்பந்தங்கள் பெருமளவு வாய்ப்புகளை வழங்கியிருப்பதாகவும் தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தியத் தொழில்துறையின் பொறுப்பை அவை புதுப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். பயன்பாட்டுக்கு உகந்த பொருட்களை உருவாக்குவது குறித்து சர்வதேச நுகர்வோரின் தேவை மற்றும் வசதி பற்றி ஆய்வு மேற்கொள்வது அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார். அதிவேக ரயில், பல்வகை போக்குவரத்து முறை, கப்பல் பழுதுபார்க்கும் அமைப்புகள் ஆகியவற்றின் விரிவாக்கம் திறமைக்கான முக்கிய படிகளாகும் என்பதை எடுத்துரைத்த பிரதமர், இதற்கேற்ப தொழில்துறையினரும் முதலீட்டாளர்களும் தங்களின் உத்திகளை வகுக்கும் போது மட்டுமே, உள்கட்டமைப்பின் உண்மையான பயனை உணரமுடியும் என்றார்.

Leave a Reply