திருவனந்தபுரத்தில் “2047-ல் வளர்ச்சியடைந்த பாரதம்: அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தேசிய மாற்றத்திற்கான எதிர்காலத் தயார்நிலை” என்ற தலைப்பில் பி. பரமேஸ்வரன் நினைவு உரை நிகழ்ச்சியில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றினார். 2014-ம் ஆண்டில் மோசமான ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்த இந்தியாவின் பயணம், இப்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது என்று அவர் கூறினார். விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதுடன், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியா, படையெடுப்புகள், காலனித்துவ ஆட்சி, சுரண்டல்கள் ஆகியவற்றில் இருந்து தப்பிய ஒரு பழங்கால நாகரிகம் என்றும், புதுப்பிக்கப்பட்ட தன்னம்பிக்கையுடன் வலுவாக இது முன்னேறுகிறது என்றும் கூறினார். கடந்த சில ஆண்டுகளில் ஜனநாயகத்தின் உண்மையான உணர்வு ஆழமடைந்துள்ளது, மிகவும் பின்தங்கிய மக்களும் தடைகள் இல்லாமல் அதிகாரம் பெற முடிந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
புதுமைக் கண்டுபிடிப்புத் துறையில், 2014-ம் ஆண்டில் இந்தியா உலகளாவிய புதுமை குறியீட்டில் 81-வது இடத்தைப் பிடித்ததாகவும், அதன் பின்னர் 38-வது இடத்திற்கு உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். நாட்டில் இப்போது இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் 21 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன என்று அவர் தெரிவித்தார். இந்தியா 100-வது ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் போது, முழுமையாக வளர்ந்த நாடாகத் திகழும் என்று, மத்திய இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் தெரிவித்தார்
திவாஹர்
