வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டுவதற்கு இளையோரின் பங்களிப்பு அவசியம் – குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்.

குடியரசு துணைத் தலைவரும், தில்லி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான திரு சி பி ராதாகிருஷ்ணன், இன்று, அப்பல்கலைக்கழகத்தின் 102 – வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு 1.2 லட்சத்திற்கும் அதிகமான பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பல்கலைக்கழகத்தின் 104 ஆண்டுகாலப்  பயணத்தையும், தரமான கல்வி மற்றும் அதன் வலுவான அர்ப்பணிப்புணர்வு ஆகியவற்றிற்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

இந்த பல்கலைக்கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வளர்ச்சி குறித்து எடுத்துரைத்த அவர், மூன்று கல்லூரிகள், இரண்டு ஆசிரியர் குழுக்கள், எட்டு துறைகள், பரிசாகப் பெற்ற புத்தகங்களின் ஒரு சாதாரண நூலகம் மற்றும் 750 மாணவர்களுடன் தொடங்கியதையும் தற்போது, இது 16 ஆசிரியர் குழுக்கள், 86 துறைகள், 90 கல்லூரிகள், 20 அரங்குகள் மற்றும் விடுதிகள், 30 – க்கும் அதிகமான மையங்கள் மற்றும் நிறுவனங்கள், 34 நூலகங்கள் மற்றும் ஆறு லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்களைக் கொண்டுள்ள பெரிய கல்வி நிறுவனமாக உருவெடுத்துள்ளது சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் உள்ள மிகவும் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக தில்லி பல்கலைக்கழகம் திகழ்வதாகக் குறிப்பிட்ட அவர், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நாட்டின் ஞானம், அரசியல், அறிவியல் மற்றும் கலாச்சார வாழ்க்கையை வழிநடத்தும் இளைஞர்களை உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்தார்.

தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் இப்பல்கலைக்கழகம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவது குறித்து குடியரசு துணைத் தலைவர் திருப்தி தெரிவித்தார்.

கல்வி, ஒழுக்கம், நட்பு, தேர்வுகள் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கொண்டாடும், அதே வேளையில், பட்டதாரி இளைஞர்கள் வலுவான மாற்றத்திற்கான சூழலில் அடியெடுத்து வைப்பதை அவர் எடுத்துரைத்தார்.

தொழில்நுட்பம் தொழில்துறையை மறுவடிவமைக்கிறது. செயற்கை நுண்ணறிவு பணியின் தன்மையை மறுவரையறை செய்கிறது. பருவநிலை மாற்றம் வளர்ச்சித் திட்டங்களுக்கு சவாலாக உள்ளது. மேலும் உலகளவில் பல்வேறு நாடுகளின் ஜனநாயக விழுமியங்கள் சோதனைகளை எதிர்கொண்டு வருகின்றன. இத்தகைய சூழலில், பட்டம் என்பது வெறும் சான்றிதழ் மட்டுமின்றி, சமூகத்திற்கு சேவையாற்றுவதற்கான உறுதிமொழியாகும் என்று அவர் கூறினார். தேசமே முதன்மையானது என்ற உறுதியான கொள்கையுடன், நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் தங்களது திறமைகளை நன்மை பயக்கும் செயகளுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

2047 – ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவின் இலக்குகளை எட்டுவதற்கு, இளைஞர்களின் பங்களிப்பு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது என்று திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply