மத்திய மாநில அரசுகள் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும்,விசைப்படகையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

ராமநாதபுரம் பாம்பன் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்திலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 12 மீனவர்கள் ஒரு விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே அமைந்துள்ள தெற்கு கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டி 12 மீனவர்களையும் அதிரடியாக கைது செய்தனர்.

இந்தக் கைது நடவடிக்கை ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதி மீனவ மக்களிடையே அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

ஏற்கனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி, கடந்த பிப்ரவரி 21ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இப்போது மீண்டும் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வரும் நிலையில், மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற ஒட்டுமொத்த மீனவர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று செயல்பட வேண்டும்.

தமிழக அரசும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

எனவே மத்திய மாநில அரசுகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், விசைப்படகையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply