புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இந்திய செயற்கைக்கோள் தாக்க உச்சிமாநாடு 2026-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் திரண்டிருந்தோர் இடையே உரையாற்றிய திரு மோடி, மனித குலத்தில் ஆறில் ஒரு பங்கினரை கொண்டுள்ள நாடாகிய இந்தியாவில் உலகின் மிகப்பெரியதும், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு நடைபெறுவதாக குறிப்பிட்டார். உலகின் மிகப்பெரிய இளையோர் மக்கள் தொகையின், மிகப்பெரிய தொழில்நுட்பத்திறன் தொகுப்பின் தாயகமாக விளங்கும் இந்தியா, தொழில்நுட்பம் சார்ந்த சூழல் அமைப்புக்காக பாடுபடுகிறது என்று அவர் கூறினார். இந்தியா புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது மட்டுமின்றி, முன் எப்போதும் இல்லாத வேகத்துடன் அவற்றை ஏற்கவும் செய்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள உலகத் தலைவர்கள், உலகளாவிய ஏஐ சூழல் அமைப்பின் தலைவர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோரை 140 கோடி இந்திய மக்களின் சார்பில் வரவேற்பதாக பிரதமர் தெரிவித்தார். இந்தியாவில் இத்தகைய உச்சிமாநாடு நடைபெறுவது நாட்டிற்கு பெருமை சேர்ப்பது மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகளாவிய தெற்கு நாடுகளுக்கும் பெருமை சேர்ப்பது என்று அவர் கூறினார்.
உலகம் முழுவதிலும் இருந்து தலைசிறந்த நிபுணர்களின் பங்கேற்புடன் சுமார் 100 நாடுகளின் பிரதிநிதிகளும் வருகை தந்துள்ள இந்த உச்சி மாநாட்டின் வெற்றி புதிய உச்சங்களைத் தொடும் என்று குறிப்பிட்ட திரு மோடி, இளைய தலைமுறையின் வலுவான பங்கேற்பு, புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக கூறினார். வேளாண்மை, பாதுகாப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி ஆகிய துறைகளில் தீர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை எடுத்துரைத்த அவர், செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியாவின் புத்தாக்க திறன்களையும் இது வெளிப்படுத்துவதாக கூறினார்.
மனிதகுல வரலாற்றில் சில நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை திருப்பங்கள் ஏற்படுவதாகவும், அவை நாகரீகத்தில் புதிய திசைகளை ஏற்படுத்துவதாகவும் பிரதமர் தெரிவித்தார். கற்களில் இருந்து முதல்முறையாக தீப்பொறி உருவாக்கப்பட்டதை நினைவு கூர்ந்த அவர், அந்த தீப்பொறி நாகரீகத்திற்கு அடித்தளமாக மாறும் என்று அப்போது எவரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள் என்றார். பேச்சுவழக்கில் இருந்த மொழி, எழுத்து வடிவத்திற்கு முதல்முறையாக மாறிய போது, எழுத்துப்பூர்வமான அறிவு, எதிர்கால அமைப்பு முறைகளுக்கு முதுகெலும்பாக மாறும் என்பதை எவரும் உணர்ந்திருக்க மாட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டார். கம்பியில்லா சமிக்ஞை முறைகள் முதலில் உருவாக்கப்பட்ட போது, ஒரு நாளில் ஒட்டுமொத்த உலகமும் நிகழ்நேரத்தில் இணைக்கப்படும் என்பதை எவரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
எஸ்.சதிஸ் சர்மா
