நாமக்கலில் அரசு நடுநிலைப்பள்ளியில் விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு தமிழக அரசு – அரசுப் பள்ளிகளை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தது மிகவும் வருத்தத்துக்குரியது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில், கலை நிகழ்ச்சி ஒத்திகையின் போது விஷப்பூச்சி கடித்ததால் 3-ம் வகுப்பு மாணவி ரக்ஷிதா உயிரிழந்தது மிகவும் வருத்தத்துக்குரியது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒத்திகையின் போது நெற்றியில் விஷப்பூச்சி கடித்ததில் மயக்கமடைந்த மாணவி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பள்ளி வளாகத்தில் புதர்கள் சரியாக அகற்றப்படாததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு அரசுப் பள்ளி வளாகப் பாதுகாப்பில் அலட்சியத்துடன் இருந்ததே இத்துயர சம்பவத்திற்கு காரணம் என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசுப் பள்ளியின் வளாகத்தை சுத்தம் சுகாதாரமாக, பாதுகாப்பாக வைக்க தவறியதே மாணவியின் உயிரிழப்புக்கு காரணமாகிவிட்டது.

இரண்டு நாட்களுக்கு முன் திருவாரூர் மாவட்டம் கேத்தனூர் அரசுப் பள்ளி வகுப்பறையில் புத்தகம் எடுக்கும்போது பாம்பு கடித்ததில் பதினோராம் வகுப்பு மாணவன் பலியாகிய நிலையில், மீண்டுமொரு துயரச் சம்பவம் மற்றொரு அரசுப்பள்ளியில் நிகழ்ந்திருப்பது தமிழக அரசின் கீழ் பள்ளிக் கல்வித்துறையின் செயலற்ற நிலையை எடுத்துக்காட்டுகிறது.

தமிழக அரசு – அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பான கல்விக்கு உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டிருக்க வேண்டும்.

மாணவியின் உயிரிழப்பு அவரது பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.

உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக அரசு உயிரிழந்த மாணவியின் இழப்புக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply