நேற்று டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் தமிழக அரசின் அலட்சியமே!- ஜி.கே.வாசன் அறிக்கை.

தமிழக அரசின் அலட்சியத்தால், நிர்வாகத் திறமையில்லாமல் TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகள் ரத்து செய்யப்படுவதா அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகள் நேற்று பிப்ரவரி 8-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த மிக முக்கியமான அரசுப்பணிக்கான தேர்வுக்கு தேதியை அறிவித்த பிறகு அதற்குண்டான பணிகளை முறையாக சரியாக செய்திருக்க வேண்டியது அந்த நிர்வாகத்தின் கடமை. இதனை செயல்படுத்த வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு.

தேர்வுக்காக இரவு பகல் பாராமல் படித்து தங்களை தயார் செய்து கொண்டு இலட்சியக் கனவுகளோடு தேர்வுக்கு வந்தால் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பானது தேர்வர்களுக்கு தடை ஏற்பட்டு வருத்தம் ஏற்பட்டது.

நேற்று சில தேர்வு மையங்களில் தேர்வர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது இந்த அறிவிப்பு வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் சில தேர்வு மையங்களில் குளறுபடிகள் ஏற்பட்டதால் தேர்வர்கள் மறியல் போராட்டங்களை நடத்தினர்.

தமிழ்நாடு முழுக்கவே தேர்வை ஒத்தி வைத்து, மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் தேர்வை ரத்து செய்கிறோம். ஒரே நம்பருக்கு இரண்டு சென்டர்கள் வருவது போன்ற தொழில்நுட்ப குளறுபடி ஏற்பட்டு உள்ளது. இதெல்லாம் நிர்வாகத் திறமையின்மைக்கு எடுத்துக்காட்டாகும்.

எனவே TNPSC – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கும், கால தாமதம் ஏற்பட்டதற்கும், தேர்வு எழுத வந்தவர்களின் மனம் வருந்தியதற்கும் தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். தேர்வுகள் ரத்தானதற்கான உண்மை நிலையை கண்டறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

மேலும் தமிழக அரசும், TNPSC – நிர்வாகமும் அரசுப்பணிக்கான தேர்வை அரசுப்பணிகள், தேர்வர்கள் நலன் ஆகியவற்றை மிக முக்கியமாக கவனத்தில் கொண்டு செயல்பட இது போன்ற குறைகள் வரும் காலத்தில் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply