கிராம ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இணைத்து அரசாணை வெளியிடக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

2018 முதல் கிராம ஊராட்சி செயலர்களுக்கு பகுதி நேர பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3,400/- மட்டுமே அனுமதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கிராம ஊராட்சி செயலர்களை பொறுத்தமட்டில் 2018 முதல் ஊதிய ஆணையம் பரிந்துரைக்குட்பட்ட “சி” கிரேடு பணியாளர்களான பதிவுறு எழுத்தர் நிலை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஊராட்சி செயலர்களை முறையான இதே ஊதியக்கட்டில் ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் அரசின் சலுகைகள் மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 2018 முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஊராட்சி செயலர்களை தற்பொழுது தமிழக அரசு அறிவித்துள்ள தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து அரசாணை வெளியிட வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் விதமாக அவர்களை தற்காலிக பணிநீக்கம் செய்து அரசு நடவடிக்கை எடுத்து வருவது மிகவும் கண்டிக்கதக்கது. தமிழக அரசு அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply