ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு. அமித் ஷா இன்று ஜம்முவில் ஒரு மறுஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தின் போது, சாலை உள்கட்டமைப்பு, மின்சாரம், தொழில், சுற்றுலா, 4G மற்றும் ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு போன்ற முக்கியத் துறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா விரிவான ஆய்வு மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் திரு. மனோஜ் சின்ஹா, முதல்வர் திரு. உமர் அப்துல்லா, மத்திய உள்துறை செயலாளர் மற்றும் மத்திய அரசு மற்றும் ஜம்மு-காஷ்மீர் அரசின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில், வளர்ந்த மற்றும் வளமான ஜம்மு-காஷ்மீரை உருவாக்குவதற்கான தொலைநோக்குப் பார்வையில் இந்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். வளர்ச்சியை விரைவுபடுத்த மோடி அரசு மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சிகள் காரணமாக, ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சித் திட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தை அடைந்துள்ளன என்று அவர் கூறினார். ஜம்மு-காஷ்மீர் அதன் நீர்மின் திட்டங்களின் முழு திறனையும் மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் 100% நிறைவுற்றதை அடைவதிலும், அனைத்து வளர்ச்சித் திட்டங்களின் பலன்களும் நோக்கம் கொண்ட பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்வதிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
எம். பிரபாகரன்
