மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறை, இன்று (06.02.2026) இந்தியா-நெதர்லாந்து ஹைட்ரஜன் ஊக்கத் தொகைத் (பெல்லோஷிப்) திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் தூய்மையான எரிசக்தியில் இந்தியா-நெதர்லாந்து அறிவியல் ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படும். மேலும், பசுமை எரிசக்தியிலும் ஹைட்ரஜன் ஆராய்ச்சியிலும் கல்வி ஒத்துழைப்புக்காக நெதர்லாந்தின் க்ரோனிங்கன் பல்கலைக்கழகமும், 19 இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களும் (ஐஐடி) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இன்று வெளியிடப்பட்ட இந்தியா–நெதர்லாந்து ஹைட்ரஜன் ஊக்கத் தொகைத் திட்டம், இந்தியாவில் அனைத்து தகுதியுள்ள முனைவர், முதுகலை விண்ணப்பதாரர்களுக்குப் பயன் அளிக்கும் ஒரு திறன் மேம்பாட்டு முயற்சியாகும்.
இந்த பெல்லோஷிப் திட்டத்தை அறிவியல், தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர், இந்தியாவுக்கான நெதர்லாந்தின் துணைத் தூதர் திரு ஹுய்ப் மிஜ்னாரெண்ட்ஸ் முன்னிலையில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய அறிவியல் தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர் கரண்டிகர், இந்தியாவின் பசுமை எரிசக்தி இலக்குகளுடன் சர்வதேச ஒத்துழைப்பும் திறன் மேம்பாட்டு முயற்சிகளும் மிக முக்கியமானவை என்று கூறினார்.
இந்தியாவிற்கான நெதர்லாந்து துணைத் தூதர் திரு ஹுய்ப் மிஜ்னாரெண்ட்ஸ், உலகளாவிய எரிசக்தி சவால்களை எதிர்கொள்வதில், இது தொடர்பான கல்வியில் நீடித்த ஒத்துழைப்பின் பங்கை வலியுறுத்தினார்.
எம்.பிரபாகரன்
