பிப்ரவரி 05, 2026 அன்று புது தில்லியின் சவுத் பிளாக்கிலிருந்து அர்ஜென்டினாவில் உள்ள அகோன்காகுவா மலைக்கு கூட்டுப் பயணத்தை பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 6,961 மீட்டர் உயரமுள்ள இந்த மலை தென் அமெரிக்காவின் மிக உயரமான சிகரமாகவும், ஆசியாவிற்கு வெளியே மிக உயரமான மலையாகவும் உள்ளது. உத்தரகாஷியில் உள்ள நேரு மலையேறுதல் நிறுவனம் (NIM) மற்றும் பஹல்காமில் உள்ள ஜவஹர் மலையேறுதல் மற்றும் குளிர்கால விளையாட்டு நிறுவனம் (JIM&WS) ஆகியவை கூட்டுப் பயணத்தை மேற்கொள்கின்றன.
சவால்களை தைரியம், மன உறுதி மற்றும் உறுதியுடன் எதிர்கொள்ள பணியாளர்களைத் தயார்படுத்தியதற்காக NIM மற்றும் JIM&WS நிறுவனங்களை ரக்ஷா மந்திரி பாராட்டினார். அணிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட அவர், இந்த வலிமையான சிகரத்தை ஏறுவது வெறும் உடல் சகிப்புத்தன்மையின் சோதனை மட்டுமல்ல, இந்தியாவின் சிறந்த மலையேறுபவர்களை வரையறுக்கும் தலைமைத்துவம், குழுப்பணி மற்றும் மன உறுதியின் உண்மையான பரிசோதனையாகும் என்று கூறினார். தென் அமெரிக்காவின் மிக உயர்ந்த சிகரம் மற்றும் ஆசியாவிற்கு வெளியே உள்ள மிக உயர்ந்த மலைக்கு உறுப்பினர்கள் வெற்றிகரமாக பயணத்தை முடித்து, நாட்டை பெருமைப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.
ஆறு பேர் கொண்ட குழுவில் உயர் பயிற்சி பெற்ற பயிற்றுனர்கள் உள்ளனர் – கர்னல் ஹேம் சந்திர சிங், கேப்டன் ஜி சந்தோஷ் குமார், ஸ்ரீ தீப் பகதூர் சாஹி, ஸ்ரீ வினோத் குசைன், என்பி சப் பூபிந்தர் சிங், மற்றும் ஹவ் ரமேஷ் குமார். இந்த பயணம் பிப்ரவரி 06, 2026 அன்று தொடங்கும், மேலும் இந்த மாத இறுதிக்குள் பயணம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகோன்காகுவா மலையில் பெறப்பட்ட அறிவு, அனுபவம் மற்றும் நம்பிக்கை ஆகியவை நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள், ஆயுதப்படை வீரர்கள் மற்றும் சாகச ஆர்வலர்களுக்கு பாதுகாப்பான, வலுவான மற்றும் மிகவும் பயனுள்ள பயிற்சிக்கு நேரடியாக பங்களிக்கும். இந்த பயணம் உலகளாவிய சாகச மற்றும் மலை ஆய்வில் இந்தியாவின் வளர்ந்து வரும் இருப்பையும் குறிக்கிறது.
திவாஹர்
