அஜித்குமார் மீது புகார் கொடுத்த நிகிதாவுக்கு ஆதரவாக பெண் இ.ஆ.ப. அதிகாரி ஒருவர் காவல்துறை உயரதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், அதைத் தொடர்ந்து அந்த காவல்துறை உயரதிகாரி மானாமதுரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரத்திற்கு பிறப்பித்தக் கட்டளைகளின் அடிப்படையில் தான் அஜித்குமார் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் என்றும் அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன. அஜித்குமார் அப்பாவி என்பது உறுதியாகி விட்ட நிலையில், அவர் மீது பொய்யான புகார் கொடுத்த நிகிதா கைது செய்யப்படுவதும், அவருக்காக காவலர்களை ஏவிய உயரதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதும் தான் நீதியாகும்.
அஜித்குமார் கொலையை பொறுத்தவரை அவரை அடித்துக் கொலை செய்த காவலர்கள் வெறும் அம்புகள் தான். அம்புகளை மட்டும் தண்டித்து விட்டு, அவர்களை ஏவியவர்களை தப்பவிடுவது நியாயமாக இருக்காது. எனவே, அஜித்குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள நிகிதா மற்றும் அதிகாரம் மிக்க உயர்பதவிகளில் இருப்பவர்களையும் சிபிஐ தயக்கமின்றி கைது செய்ய வேண்டும். படுகொலை செய்யப்பட்ட அஜித்குமார் குடும்பத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ.25 லட்சத்துடன், கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க திமுக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்
