தமிழக அரசு அரசுப்பள்ளிகளை தொடர்ந்து ஆய்வு செய்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பனியாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!- ஜி‌.கே.வாசன் வலியுறுத்தல்.

திருவள்ளுர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவன் உயிரிழந்தது மிகவும் வருத்தத்துக்குரியது.

தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறையானது அரசுப்பள்ளியை முறையாக சரியாக பராமரிக்கத் தவறியதால் இத்துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது

திருவள்ளூர் மாவட்டம், கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்ததில் 7 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது மிகவும் வருத்தத்துக்குரியது.

அரசுப்பள்ளிகளில் அரையாண்டு தேர்வு காலை, மாலை என இரண்டு வேலைகளில் நடந்து வருகிறது.

7 ம் வகுப்பு மாணவன் மோகித் தேர்வு எழுத வந்திருந்தார். தேர்வுக்கு முன்னதாக அவர் பள்ளியின் வளாகத்தில் உள்ள கைப்பிடி சுவர் அருகே அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது திடீரென்று பள்ளியின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததால் அதில் சிக்கி உயிரிழந்தார்.

பள்ளிக்குச் சென்ற பிள்ளை வீட்டிற்கு பத்திரமாக திரும்புவான் என்று எதிர்பார்த்த பெற்றோர் பிள்ளை உயிரிழந்த அதிர்ச்சியான செய்தி கேட்டு பெரும் கவலை அடைந்தனர். இந்த உயிரிழப்பால் மாணவனின் பெற்றோர் மிகுந்த வேதனையில் உள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர்.

பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்திருந்ததால் அதை புதிதாகக் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறையும், மாவட்ட கல்வி நிர்வாகமும், அரசுப்பள்ளியும் பள்ளியின் சுற்றுச்சுவரை, பள்ளி வளாகத்தை சரியாக பராமரித்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்ய தவறியதால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் தமிழக அரசு அரசுப்பள்ளிகளை தொடர்ந்து கண்காணிக்கத் தவறியது தான்.

அரசுப்பள்ளிகளில் அவ்வப்போது சுவர்கள், மேற்கூரைகள் இடிந்துவிழுவது தொடர்வதை தமிழக அரசு மிக முக்கிய கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளின் கட்டிடங்களின் தரத்தை அவ்வப்போது உறுதி செய்ய வேண்டிய கடமை தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும் உண்டு.

இனிமேலாவது தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளை தொடர்ந்து ஆய்வு செய்து படிக்கின்ற மாணவர்களுக்கும், பணிபுரியும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களுக்குமான பாதுகாப்பை உறுதி செய்ய முறையாக, சரியாக பராமரிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.

மாணவனை இழந்து வாடும் பெற்றோருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் த.மா.கா(மூ) சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply