தமிழ்நாட்டில் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ், கோயில்கள் உட்பட 412 நினைவுச் சின்னங்கள் மத்திய அரசால் பாதுகாக்கப்பட்டு வருவதாக, கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு துரை வைகோ மற்றும் டாக்டர் எம் கே விஷ்ணு பிரசாரத் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மத்திய அரசால் பாதுகாக்கப்பட்டு வரும் இந்த 412 நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்களை அழகுபடுத்துவது, பராமரிப்பது, பாதுகாப்பது போன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார். நிதி ஆதாரங்களுக்கு ஏற்ப அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தளங்கள் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் திருவெறும்பூரில் உள்ள இரும்பீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு தளங்களை அழகுபடுத்துவதற்கான பணிகள் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த விரிவான விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்படி அழகுபடுத்தும் பணிகளுக்காக, கடந்த 2022 – 23-ம் நிதியாண்டில் 19.95 கோடி ரூபாயும், 2023 – 24-ம் ஆண்டு நிதியாண்டில் 22.50 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு முழுவதும் செலவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2024 – 25-ம் நிதியாண்டில் 18.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 18.94 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2025 – 26-ம் நிதியாண்டில் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு நவம்பர் 21-ம் தேதி வரை 12.42 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
எஸ்.சதிஸ் சர்மா
