நலம் காக்கும்ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 2025-26-ம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், உயர் மருத்துவ சேவைகள் வழங்க மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதன்படி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆக.2ம் தேதி சென்னை, சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கி வைத்தார். இந்த உயர் மருத்துவ சேவை சிறப்பு முகாம் ஒன்றிற்கு 1.08லட்சம் வீதம் மாநிலம் முழுவதும் மொத்தம் 1,256 முகாம்களுக்கு ரூ.13.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரகப் பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இம்முகாம்களில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மாநிலம் முழுவதும் இதுவரை 632 முகாம்கள் நடத்தப்பட்டு, 9,86,732 பேர் பயனடைந்துள்ளனர். அந்தவகையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களுக்கு வரும் மக்களுக்கு குடிநீர், இருக்கை வசதிகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும், முகாம்களுக்கு வருகை தரும் மக்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கிட போதுமான அளவிற்கு தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும் முதல்வர் என்றும் அறிவுறுத்தினார்.
எஸ்.திவ்யா
