அக்டோபர் 31, 2025 அன்று மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற 12 வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் – பிளஸ் (ADMM-Plus) நிகழ்வின் போது, பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங், அமெரிக்க போர் செயலாளர் திரு பீட் ஹெக்செத்தை சந்தித்தார். இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது, அதைத் தொடர்ந்து தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகள் நேரடியாக நடத்தப்பட்டன.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் தொடர்ந்து வரும் வேகத்தை இரு தலைவர்களும் பாராட்டினர், மேலும் அதன் அனைத்து தூண்களிலும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மையை மேலும் கட்டியெழுப்புவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். தற்போதைய பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் நீடிக்கும் சவால்களை அவர்கள் மதிப்பாய்வு செய்தனர் மற்றும் தற்போதைய பாதுகாப்புத் துறை மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் குறித்து விவாதித்தனர். அதிகரித்து வரும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலையில், சவால்களை எதிர்கொள்ள இரு தலைவர்களும் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டனர்.
பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்தியா அமெரிக்காவிற்கு முன்னுரிமை அளிக்கும் நாடு என்றும், சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பகுதியை உறுதி செய்வதற்காக இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்ற அவர்கள் உறுதிபூண்டுள்ளதாகவும் போர் செயலாளர் மீண்டும் வலியுறுத்தினார்.
சந்திப்பிற்குப் பிறகு, இரு தலைவர்களும் ‘அமெரிக்கா-இந்தியா முக்கிய பாதுகாப்பு கூட்டாண்மைக்கான கட்டமைப்பில்’ கையெழுத்திட்டனர், இது ஏற்கனவே வலுவான பாதுகாப்பு கூட்டாண்மையில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கும். 2025 கட்டமைப்பு அடுத்த 10 ஆண்டுகளில் கூட்டாண்மையை மேலும் மாற்றுவதற்கான ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஒருங்கிணைந்த தொலைநோக்கு மற்றும் கொள்கை திசையை வழங்குவதே இதன் நோக்கம்.
X இல் ஒரு பதிவின் மூலம், இந்த கட்டமைப்பு இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு உறவின் முழு நிறமாலைக்கும் கொள்கை வழிகாட்டுதலை வழங்கும் என்று ரக்ஷா மந்திரி நம்பிக்கை தெரிவித்தார். “இது நமது வளர்ந்து வரும் மூலோபாய ஒருங்கிணைப்பின் சமிக்ஞையாகும், மேலும் கூட்டாண்மையின் புதிய தசாப்தத்தை இது குறிக்கும். நமது இருதரப்பு உறவுகளின் முக்கிய தூணாக பாதுகாப்பு நீடிக்கும். சுதந்திரமான, திறந்த மற்றும் விதிகளுக்கு உட்பட்ட இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதி செய்வதற்கு நமது கூட்டாண்மை மிக முக்கியமானது,” என்று அவர் எழுதினார்.
ஒரு பதிவில், திரு. பீட் ஹெக்செத், இந்த கட்டமைப்பு இருதரப்பு பாதுகாப்பு கூட்டாண்மையை முன்னேற்றுவதாகவும், இது பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் தடுப்புக்கான ஒரு மூலக்கல்லாகும் என்றும் கூறினார். “நாங்கள் எங்கள் ஒருங்கிணைப்பு, தகவல் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துகிறோம். எங்கள் பாதுகாப்பு உறவுகள் ஒருபோதும் வலுவாக இருந்ததில்லை” என்று அவர் எழுதினார்.
இராணுவ-இராணுவ பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகள், தகவல் பகிர்வு, ஒத்த எண்ணம் கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய கூட்டாளர்களுடன் ஒத்துழைப்பு, பாதுகாப்பு தொழில்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு வழிமுறைகள் மூலம் இந்தியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு உறவை தொடர்ந்து விரிவுபடுத்தி ஆழப்படுத்தி வருகின்றன.
திவாஹர்
