மனதின் குரல் சுதேசி பொருட்களின் விற்பனை அதிகரிப்பு: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி பெருமிதம்.

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  நாடு முழுவதிலும் இப்போது பண்டிகைக்காலக் குதூகலம் நிரம்பி இருக்கிறது.  நாமனைவரும் சில நாட்கள் முன்னர் தாம் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினோம், பெரும் எண்ணிக்கையில் மக்கள் இப்போது சட்பூஜையில் சுறுசுறுப்பாகி வருகிறார்கள்.  வீடுகளில் டேகுவா தின்பண்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் கரையோரங்கள் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  சந்தைகளில் மினுமினுப்பு நிரம்பி வழிகிறது.  அனைத்து இடங்களிலும் சிரத்தை, நேசம் மற்றும் பாரம்பரியத்தின் சங்கமம் தென்படுகிறது.  சட் பண்டிகையின் விரதம் அனுஷ்டிக்கும் பெண்கள் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் பக்தியோடு இந்தப் பண்டிகைக்கான முஸ்தீபுகளில் ஈடுபட்டு வருவதே கூட மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது.

            நண்பர்களே, சட் எனும் பெரும்பண்டிகைக் கலாச்சாரம், இயற்கை மற்றும் சமூகத்திற்கு இடையேயான ஆழமான ஒற்றுமையைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது.  சட்பூஜையின் போது நதிக்கரைகளில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் ஒன்றாக இணைகிறார்கள்.  இந்தக் காட்சி பாரத சமூகத்தின் ஒற்றுமைக்கான மிக அழகான எடுத்துக்காட்டாக விளங்குகிறது.  நீங்கள் தேசம் மற்றும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால், கண்டிப்பாக சட் உற்சவத்தில் கலந்து கொள்ளுங்கள்.  ஒரு வித்தியாசமான அனுபவத்தை நீங்கள் உணர்வீர்கள்.  நான் சட் அன்னைக்கு என் வணக்கத்தைக் காணிக்கையாக்குகிறேன்.  நாட்டுமக்கள் அனைவருக்கும், குறிப்பாக பிஹார், ஜார்க்கண்ட் மற்றும் பூர்வாஞ்சல் மக்களுக்கு சட் பெரும் பண்டிகைக்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

            நண்பர்களே, பண்டிகைகளின் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் உங்கள் அனைவரின் பெயரிலும் ஒரு கடிதம் வரைந்து என் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறேன்.  தேசத்தின் எந்தச் சாதனைகள் காரணமாக பண்டிகைகளின் பகட்டு மேலும் அதிகரித்துள்ளதோ, அவை பற்றி நான் இந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறேன்.  நான் வரைந்த கடிதத்துக்கு பதில் அளிக்கும் வகையில் நாட்டின் பல குடிமக்கள் தங்களுடைய கருத்துக்களை அனுப்பியிருக்கிறார்கள்.  உண்மையிலேயே ஆப்பரேஷன் சிந்தூர், அனைத்து இந்தியர்களின் இதயங்களையும் பெருமிதத்தில் ஆழ்த்தியிருக்கிறது.  ஒரு காலத்தில் மாவோயிச பயங்கரவாத இருள் சூழ்ந்திருந்த பகுதிகளில் கூட இந்த முறை சந்தோஷ தீபங்கள் ஏற்றப்பட்டன.  அந்த மாவோயிச பயங்கரவாதம் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள், இது அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நமனாக ஆகியிருந்தது. 

            ஜிஎஸ்டி சேமிப்புக் கொண்டாட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் பெரும் உற்சாகம் காணப்பட்டது.  இந்த முறை பண்டிகைகளின்போது மேலும் ஒரு இனிமையான விஷயத்தைப் பார்க்க முடிந்தது.  சந்தைகளில் சுதேசிப் பொருட்கள் வாங்குவது பலமாக அதிகரித்திருந்தது.  எந்த சுதேசிப் பொருட்களைத் தாங்கள் வாங்கியிருந்தார்கள் என்பதை இந்த முறை எனக்கு மக்கள் கடிதங்கள் வாயிலாகத் தெரிவித்திருந்தார்கள்.

            நண்பர்களே, சமையல் எண்ணெய்ப் பயன்பாட்டில் பத்து சதவீதம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று நான் உங்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தேன், இது தொடர்பாகவும் உங்கள் ஆக்கப்பூர்வமான வெளிப்பாடுகளைப் பார்க்க முடிந்தது.

            நண்பர்களே, தூய்மை மற்றும் தூய்மை தொடர்பான முயற்சிகள் தொடர்பாகவும் ஏராளமான செய்திகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன.  நான் பல்வேறு நகரங்களின் சம்பவங்கள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்கிறேன், இவை மிகவும் உத்வேகம் அளிக்கவல்லவை.  சத்திஸ்கட்டின் அம்பிகாபூரிலே, நெகிழிக் குப்பையை அகற்றும் ஒரு வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.  அம்பிகாபூரில் குப்பைக் கஃபே நடத்தப்படுகிறது.  இது எப்படிப்பட்ட கஃபே என்றால், இங்கே குப்பைக்கழிவுகளைக் கொண்டு சேர்த்தால், வயிறார உணவு கொடுக்கப்படுகிறது.  யாரேனும் ஒருவர் ஒரு கிலோ நெகிழிக் குப்பையைக் கொண்டு சேர்த்தால், அவருக்கு பகலுணவோ, இரவு உணவோ கொடுக்கப்படுகிறது.  யாரேனும் அரை கிலோ நெகிழிக் கழிவுகளைக் கொண்டு வந்து கொடுத்தால், அவருக்கு காலை உணவு அளிக்கப்படுகிறது.  இந்தக் கஃபேயை அம்பிகாபூரின் நகராட்சி நிர்வகித்து வருகிறது. 

            நண்பர்களே, இதைப் போலவே ஒரு அருமையான விஷயத்தை பெங்களூரூவின் பொறியாளர் கபில் ஷர்மா செய்திருக்கிறார்.  பெங்களூரூ என்பது ஏரிகள்-குளங்களின் நகரமாகக் கருதப்படுகிறது, கபில் அவர்கள் இங்கிருக்கும் ஏரிகள்-குளங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் இயக்கம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.  கபில் அவர்களின் குழுவானது பெங்களூரூ மற்றும் அதன் அருகில் இருக்கும் பகுதிகளில் 40 குளங்கள் மற்றும் 6 ஏரிகளுக்குப் புத்துயிர் அளித்திருக்கிறார்கள்.  குறிப்பான விஷயம் என்னவென்றால், இவர்கள் தங்களுடைய இந்தப் பணியோடு தனியார் பெருநிறுவனங்கள் மற்றும் அந்தப் பகுதிவாழ் மக்களையும் இணைத்திருக்கிறார்கள் என்பதுதான்.  இவர்களுடைய இந்த அமைப்பானது மரம் நடும் இயக்கத்தோடும் தொடர்பு கொண்டிருக்கிறது.  நண்பர்களே, அம்பிகாபூர் மற்றும் பெங்களூரூ, இந்த கருத்தூக்கம் அளிக்கவல்ல எடுத்துக்காட்டுகள் எல்லாம், நாம் ஒன்றைச் செய்ய தீர்மானித்துவிட்டால், மாற்றம் ஏற்பட்டே தீரும் என்பதையே நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

            நண்பர்களே, மாற்றத்திற்கான மேலும் ஒரு உதாரணம், மேலும் ஒரு முயற்சி குறித்து நான் உங்களோடு பகிர விரும்புகிறேன்.  மலைகளின் மீதும், சமவெளிகளிலும் இருக்கும் காடுகள் எல்லாம், வனங்களின் மண்ணை இறுக்கப் பிணைத்து வைக்கின்றன, அதே போல கடலோரங்களிலும் இருக்கும் சதுப்புநிலக்காடுகளும் சிறப்புத்தன்மை வாய்ந்தவை.  இந்த அலையாத்திக் காடுகள் கடலின் உவர்நீர் மற்றும் சதுப்புநிலத்திலே வளர்கின்றன, கடற்பகுதி சூழலமைப்பின் முக்கியமான அங்கமாக இருக்கின்றன.  சுனாமியோ, சூறாவளியோ, எந்த ஒரு இயற்கைப் பேரிடர் வந்தாலும், இந்த அலையாத்திக் காடுகள் மிகவும் உதவிகரமாக இருக்கின்றன. 

            நண்பர்களே, குஜராத்தின் வனத்துறை சதுப்புநிலக்காடுகளின் இந்த மகத்துவத்தைப் புரிந்துகொண்டு மிகச் சிறப்பான இயக்கம் ஒன்றை முன்னெடுத்திருக்கிறது.  ஐந்து ஆண்டுகள் முன்பாக வனத்துறையின் குழுக்கள், அஹமதாபாதிற்கு அருகிலே தோலேராவிலே, அலையாத்திக் காடுகளை ஏற்படுத்தும் பணியைத் தொடங்கினார்கள்.  இன்று, தோலேராவின் கரையோரத்தில் 3,500 ஹெக்டேர் பரப்பளவில் சதுப்பு நிலக்காடுகள் பரவியிருக்கின்றன.  இந்த அலையாத்திக் காடுகளின் தாக்கம் இன்று மொத்தப் பகுதியிலும் காணக் கிடைக்கிறது.  இங்கிருக்கும் சூழலமைப்பில் டால்ஃபின் மீன்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.  கேகடே மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்கள், முன்பைவிட அதிகம் காணப்படுகின்றன.  இது மட்டுமல்ல, இப்போது இங்கே வலசைவரும் வெளிநாட்டுப் பறவைகளும் கணிசமான எண்ணிக்கையில் வரத் தொடங்கியிருக்கின்றன.  இதன் காரணமாக அங்கே சுற்றுச்சூழலின் மீது நல்ல தாக்கம் ஏற்பட்டிருப்பதோடு, தோலேராவில் இருக்கும் மீன் வளர்ப்பாளர்களுக்கும் ஆதாயங்கள் ஏற்பட்டு வருகிறது.

            நண்பர்களே, தோலேராவைத் தவிர, குஜராத்தின் கட்ச் பகுதியிலும் கூட இப்போதெல்லாம் சதுப்புநிலக்காடுகள் அதிக அளவில் அமைக்கப்படுகிறது, மேலும் கோரி க்ரீக்கிலே சதுப்புநிலக்காடுகள் கற்றல் மையம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. 

            நண்பர்களே, செடிகள்-தாவரங்கள், மரங்களின் சிறப்புத்தன்மையே இதுதான்.  எந்த இடமாக இருந்தாலும், அவை அனைத்து உயிரினங்களின் சிறப்பான நன்மைக்கு உதவிகரமாக விளங்குகின்றன.  ஆகையால் தான் நமது புனித நூல்களில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்றால் –

தன்யா மஹீரூபா ஏப்யோ,

நிராஷாம் யாந்தி நார்த்தின:

    அதாவது, யாருக்கும் ஏமாற்றம் அளிக்காத மரங்கள்-தாவரங்களுக்கும் தலைவணங்குகிறோம் என்பதே இதன் பொருள்.  நாம் எந்தப் பகுதியில் வசிக்கிறோமோ, அங்கே கண்டிப்பாக மரங்களை நாம் நட வேண்டும்.  தாயின் பெயரால் ஓர் மரம் இயக்கத்தை நாம் இன்னும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

            என் கனிவான நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம் உரையாடும் விஷயங்களில் எனக்கு அதிக நிறைவை அளிக்கும் விஷயம் என்ன தெரியுமா?   இது குறித்து நான் ஒன்றை மட்டும் கூறுவேன், நாம் எந்த விஷயங்கள் குறித்துப் பேசுகிறோமோ, அவற்றால் சில நல்லவற்றை, சில புதுமையானவற்றை சமுதாயத்திற்குக் செய்யும் உத்வேகம் மக்களுக்குக் கிடைப்பதாக இருக்கவேண்டும், இதனால் நமது கலாச்சாரம், நமது தேசத்தின் பல கோணங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதை மட்டும் நான் கூறிக் கொள்கிறேன்.

            நண்பர்களே, உங்களில் பலருக்கு ஒரு விஷயம் நினைவிருக்கலாம், சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், நான் இந்த நிகழ்ச்சியில் இந்திய நாய் இனங்கள் பற்றிப் பேசியிருந்தேன்.  நாட்டுமக்களோடு இணைந்து நான் நமது பாதுகாப்புப் படைகளிடத்திலும் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன், அதாவது இந்திய நாய் இனங்களைப் பயன்படுத்த வேண்டும், ஏனென்றால் அவை நமது சூழல்-நிலைகளோடு அதிக எளிதான வகையில் இணைந்து விடுகின்றன.  நமது பாதுகாப்புப் படைகள் இந்தத் திசையில் மிகவும் பாராட்டுக்குரிய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.  எல்லையோரக் காவல்படை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் தங்களுடைய அணிகளில் இந்திய இனங்களைச் சேர்ந்த நாய்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கின்றார்கள்.  நாய்களின் பயிற்சிக்காக, எல்லையோரக் காவல்படையின் தேசிய பயிற்சி மையம் குவாலியரின் டேகன்பூரில் இருக்கிறது.  இங்கே உத்தர பிரதேசத்தின் ராம்பூர் ஹவுண்ட், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த முதோல் ஹவுண்ட் ஆகியவை மீது சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டு வருகிறது.  இந்த மையத்தில் பயிற்சியாளர்கள், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் படைத்தலின் துணையோடு நாய்களுக்குச் சிறப்பான பயிற்சி கொடுத்து வருகிறார்கள்.  இந்திய நாய் ரகங்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்கான கையேடுகளும் எழுதப்பட்டிருக்கின்றன, இதன் வாயிலாக அவற்றின் தனித்தன்மை வாய்ந்த பலங்கள் முன்வைக்கப்படுகின்றன.  பெங்களூரூவிலே, மத்திய ரிசர்வ் காவல்படையின் நாய்கள் இனப்பெருக்கம் மற்றும் பயிற்சிப் பள்ளியில், மாங்க்ரெல்ஸ், முதோல் ஹவுண்ட், கோம்பை மற்றும் பாண்டிகோனா போன்ற இந்தியரக நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

            நண்பர்களே, கடந்த ஆண்டு லக்னவில், அகில இந்திய காவலர்கள் பணிச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அந்த நேரத்தில், ரியா என்ற பெயருடைய ஒரு நாய், அனைவரின் கவனத்தையும் தன்பால் ஈர்த்தது.  இது ஒரு முதோல் ஹவுண்ட், இதற்கு எல்லையோரக் காவல் படை பயிற்சி கொடுத்திருந்தது.  பல அயல்நாட்டு நாய் இனங்களை இங்கே பின்னுக்குத் தள்ளி முதல் பரிசினை வென்றது ரியா.

            நண்பர்களே, இப்போது எல்லையோரக் காவல்படையானது தனது நாய்களுக்கு அந்நியப் பெயர்களைக் கொடுப்பதற்கு பதிலாக, இந்தியப் பெயர்களைச் சூட்டும் பாரம்பரியத்தைத் தொடங்கியிருக்கிறது.  நமது நாட்டு ரக நாய்கள் அற்புதமான சாகஸங்களை வெளிப்படுத்தி இருக்கின்றன.  கடந்த ஆண்டு, சத்திஸ்கட்டின் மாவோயிஸம் பாதித்த பகுதிகளில், ரோந்துப் பணிகளின் போது, மத்திய ரிசர்வ் காவல் படையின் ஒரு நாட்டுரக நாயானது, 8 கிலோகிராம் வெடிப்பொருட்களை இனம் கண்டது.  எல்லையோரக் காவல்படையும், மத்திய ரிசர்வ் காவல் படையும் இந்தத் திசையில் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை.  மேலும் நான் அக்டோபர் 31ஆம் தேதிக்காகவும் காத்திருக்கிறேன்.  இது இரும்புமனிதர் சர்தார் படேல் அவர்களின் பிறந்த நாளாகும்.  இந்தச் சந்தர்ப்பத்தில் ஒவ்வோர் ஆண்டும் குஜராத்தின் ஒற்றுமை நகரில் உள்ள ஒற்றுமைச் சிலைக்கு அருகிலே ஒரு சிறப்பான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்வார்கள்.  இங்கே ஒற்றுமை நாள் அணிவகுப்பு நடக்கும், அந்த அணிவகுப்பிலே மீண்டும் இந்தியரக நாய் ரகங்களின் வல்லமை வெளிப்படுத்தப்படும்.  நீங்களும் வாய்ப்புக் கிடைத்தால் இதைக் கண்டிப்பாகப் பாருங்கள்.

            என் மனம்நிறை நாட்டுமக்களே, சர்தார் படேல் அவர்களின் 150ஆவது பிறந்தநாள், நாடெங்கிலும் ஒரு சிறப்பான சந்தர்ப்பமாகும்.  சர்தார் படேல், நவீனகால தேசத்தின் அதிக மகத்துவம் வாய்ந்த ஆளுமைகளில் ஒருவர்.  அவருடைய மாபெரும் ஆளுமைத்தன்மையில் பல குணங்கள் நின்று ஒளிவீசுகின்றன.  அவர் பெரும் மேதாவிலாசம் உடைய மாணவர்.  அவர் பாரதம் மற்றும் பிரிட்டன், இருநாடுகளிலும் கல்வியில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டார்.  அவர் தன்னுடைய காலத்தின் மிக வெற்றிகரமான வழக்குரைஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.  அவர் வக்கீல் தொழிலில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தாலும், காந்தியடிகளால் உத்வேகம் அடைந்து, தன்னைத்தானே சுதந்திரப் போராட்ட வேள்வியில் அர்ப்பணம் செய்து கொண்டார்.  கேடா சத்தியாகிரகம் தொடங்கி போர்சத் சத்தியாகிரகம் வரை பல போராட்டங்களில் அவருடைய பங்களிப்பு இன்றும் கூட நினைவில் கொள்ளப்பட்டு வருகிறது.  அஹ்மதாபாத் நகராட்சியின் தலைவர் என்ற வகையிலே அவருடைய பணிக்காலம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.  துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் என்ற வகையிலே அவருடைய பங்களிப்பிற்காக நாம் அனைவரும் கடன்பட்டிருக்கிறோம். 

            நண்பர்களே, சர்தார் படேல் தான் பாரதத்தின் bureaucratic framework, அதிகாரத்துவ சட்டகத்தின் பலமான அடித்தளத்தை அமைத்தார்.  தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அவர் ஈடு இணையற்ற முயற்சிகளைச் செய்திருக்கிறார்.  அக்டோபர் 31 அன்று சர்தார் ஐயாவின் பிறந்த நாள் நாடெங்கிலும் நடக்கவிருக்கிறது, இதிலே நீங்கள் பங்கெடுப்பது மட்டுமல்லாது, மற்றவர்களோடு கூடவும் சேர்ந்து பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.  ஒரு வகையில் இளைஞர்களின் விழிப்புணர்வுக்கான சந்தர்ப்பமாக இந்த ஒற்றுமை ஓட்டம் ஆக வேண்டும், இது ஒற்றுமைக்கு மேலும் வலுசேர்க்கும்.  இதுவே பாரதத்தை ஒற்றுமை என்ற இழையில் இணைக்கின்ற அந்த மகத்தான ஆளுமைக்கு நாம் செலுத்தக்கூடிய மெய்யான சிரத்தாஞ்சலியாக இருக்கும்.

            என் அன்பான நாட்டுமக்களே, தேநீருடனான என்னுடைய ஈடுபாட்டை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள் ஆனால் நாம் ஏன் இன்றைய மனதின் குரலில் காஃபியோடு உரையாடலை நிகழ்த்தக் கூடாது என்று நான் எண்ணமிட்டேன்.  கடந்த ஆண்டு நாம் மனதின் குரலில் அராகு காப்பி பற்றிப் பேசியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  சில காலம் முன்பாக, ஒடிஷாவின் பலர் கோராபுட் காப்பி பற்றியும் தங்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.  மனதின் குரலில் கோராபுட் காப்பி பற்றியும் நான் பேச வேண்டும் என்று அவர்கள் கேட்டு கொண்டார்கள். 

            நண்பர்களே, கோராபுட் காப்பியின் சுவை அலாதியானது, இது மட்டுமல்ல, சுவை ஒருபுறம் இருந்தாலும், காப்பி சாகுபடி மக்களுக்கு ஆதாயங்களை அளித்து வருகிறது.  கோராபுட்டில் சிலரோ தங்களின் பேரார்வம் காரணமாக காப்பி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.  தனியார் பெருநிறுவன உலகில், மேல்நிலைகளில் வேலை பார்த்து வந்தாலும், காப்பியின் மேலுள்ள பிரியத்தால் இந்தத் துறைக்கு வந்ததோடு, வெற்றிகரமாகப் பணியாற்றியும் வருகிறார்கள்.  இதிலே பல பெண்களும் இருக்கிறார்கள், இவர்களின் வாழ்க்கையில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.  காப்பியால் அவர்களுக்கு மரியாதை, வளமை இரண்டுமே  கிடைக்கின்றன.  சொல்லப்படும் இந்தக் கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை :

இதன் பொருள், கோராபுட் காப்பி மிகவும் சுவையானது!

இதுவே ஒடிஷாவின் பெருமிதம்!!

            நண்பர்களே, உலகெங்கிலும் பாரதத்தின் மீதான நாட்டம் மிகவும் அதிகரித்து வருகிறது.  கர்நாடகத்தின் சிக்மங்களூருவாகட்டும், கூர்காகட்டும், ஹாஸனாகட்டும், தமிழ்நாட்டின் பழனி, ஷெவ்ராய், நீலகிரி, அண்ணாமலை பகுதிகளாகட்டும், கர்நாடக-தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளின் பிலிகிரி பகுதியாகட்டும், கேரளத்தின் வயநாடு, திருவாங்கூர் மற்றும் மலபார் பகுதிகளாகட்டும், பாரதத்தில் கணிசமான அளவு காப்பியின் பன்முகத்தன்மை இருக்கிறது.  நமது வடகிழக்கிலும் கூட காப்பி சாகுபடி அதிகரித்து வருகிறது.  இதனால் பாரத நாட்டு காப்பியின் அடையாளம் உலகெங்கிலும் பலமடைந்து வருகிறது.  இதனால் தான் காப்பிப் பிரியர்கள் கூறுகிறார்கள் – இந்தியாவின் காப்பிதான் மிகச் சிறப்பான காப்பி.  இது இந்தியாவில் காய்ச்சப்பட்டு, உலகத்தால் விரும்பப்படுகிறது. 

            எனதருமை நாட்டுமக்களே, இப்போது மனதின் குரலில் நாம் உரையாட இருக்கும் ஒரு விஷயம், அனைவரின் இதயங்களுக்கும் மிகவும் நெருக்கமானது.  இந்த விஷயம் நமது தேசியப் பாடல் பற்றியது – பாரதத்தின் தேசியப் பாடலான வந்தே மாதரம்.  இது எப்படிப்பட்ட பாடலென்றால், இதன் முதல் சொல்லே கூட நமது இதயங்களின் உணர்வுகளைக் கொள்ளை கொண்டு விடுகிறது.  வந்தேமாதரம் என்ற இந்த ஒரு சொல்லிலே தான் எத்தனை உணர்வுகள், எத்தனை சக்திகள்!!  இயல்பான வகையிலே இது நமக்கு பாரத அன்னையின் தாய்மை உணர்வை உணரச் செய்கிறது.  இதுதான் பாரத அன்னையின் பிள்ளைகள் என்ற வகையில் நமது பொறுப்புக்களைப் பற்றி நமக்கு அறிவுறுத்துகிறது.  கடினங்கள் நிறைந்த வேளையாக இருந்தால், வந்தேமாதரம் என்ற கோஷம், 140 கோடி நாட்டுமக்களுக்குள்ளே ஒற்றுமை சக்தியை நிரப்பி விடுகிறது. 

            நண்பர்களே, தேசபக்தி, பாரத அன்னையிடம் அன்பு, சொற்களுக்கு அப்பாற்பட்ட உணர்வுகள் என்றால், வந்தேமாதரம் அந்த வெளிப்படுத்த இயலா உணர்வுகளுக்கு வடிவம் தரும் பாடலாகும்.  பல நூற்றாண்டுக்கால அடிமைத்தனத்தில் சிதைந்து போயிருந்த பாரதத்தில் புதிய உயிர்ப்பை ஏற்படுத்த பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா அவர்கள் இதனை இயற்றினார்.  வந்தேமாதரம் 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக இருந்தாலும், இதன் உணர்வு பாரதத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான, என்றும் அழியா விழிப்புணர்வோடு இணைந்தது.  மாதா பூமி: புத்ரோ அஹம் பிருதிவ்யா: என்று வேதங்கள் முழங்கி, பாரதீய கலாச்சாரத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தன.  பங்கிம்சந்திரர், வந்தேமாதரம் பாடலை எழுதி, தாய்த்திருநாட்டிற்கும், அதன் குழந்தைகளுக்கும் இடையேயான உறவினை, உணர்வு உலகில் ஒரு மந்திரத்தின் வடிவிலே இறுகப் பிணைத்தார்.

Leave a Reply