வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி தொடங்கியதன் காரணமாக அக்டோபர் 16, 17 மற்றும் 18 ஆகிய மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலான மழை பெய்தது. குறிப்பாக, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சராசரியாக 12 மி.மீ. மழை பெறப்பட்டது.
திருவாரூர், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து ஆய்வு மேற்கொண்டு, ஆயத்த நிலை மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
எஸ்.திவ்யா
