சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கடத்த முற்பட்ட தங்கம், வெளிநாட்டு கரன்சி, போதைப்பொருள்கள் விமான புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டது. கடந்த வாரம் விமான நிலையத்தில் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 9 கிலோ போதைப்பொருள், 594 கிராம் தங்கம் மற்றும் 51.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எல்லைத் தாண்டிய கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், நாட்டின் நலனை பாதுகாக்கும் வகையிலும், சுங்கத்துறை அதிகாரிகள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

பாங்காங்கிலிருந்து தாய் விமானம் மூலம் அக்டோபர் 8-ம் தேதி அன்று சென்னை வந்த பயணி ஒருவரின் உடைமைகளை பரிசோதனை செய்ததில் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டதை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.  7.473 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

புலனாய்வு தகவல் அடிப்படையில் அக்டோபர் 6-ம் தேதி அன்று சென்னை விமான நிலைய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் அபுதாபியிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 594 கிராம் 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்டோபர் 4-ம் தேதி அன்று சிங்கப்பூரைச் சேர்ந்த பயணி ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 51.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் எதுவுமின்றி கொண்டுவரப்பட்ட  இந்த வெளிநாட்டு கரன்சிகள் அயலக பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply