நெல் கொள்முதல், சேமிப்பு, இருப்பு, நகர்வு, அரவை மற்றும் உரங்கள் இருப்பு தொடர்பாக டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று(2.10.2025) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் அரியலூர் ஆகிய டெல்டா மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நெல் கொள்முதல், சேமிப்பு, இருப்பு, நகர்வு, அரவை மற்றும் உரங்கள் இருப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆண்டு மேட்டூர் அணை உரிய காலத்தில் திறந்த காரணத்தினாலும், கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதாலும், பருவ மழையினால் விவசாயிகளுக்கு தண்ணீர் குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைக்கப்பெற்றதாலும், இடுபொருள் மானியம், விவசாயக் கடன்கள் ஆகியவற்றினால் கடந்த ஆண்டைவிட அதிக அளவில் விளைச்சலும், மகசூலும் விவசாய பெருங்குடிமக்களுக்கு டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் கிடைத்துள்ளது.

இந்த அரசு பொறுப்பேற்றவுடன், மழைக்காலங்களில் விவசாயிகள் பாடுபட்டு உற்பத்தி செய்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்குடன் அதிக அளவில் நெல் சேமிப்புக் கிடங்குகளை கட்டிவருகிறது. அந்தவகையில், இதுவரை நெல் மணிகளைப் பாதுகாத்திட 4.03 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல்சேமிப்புத் தளங்கள் கட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 2024-25 நெல் கொள்முதல் பருவத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு சாதனையாக 47.99 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2024-2025 கொள்முதல் பருவத்தில் செப்டம்பர் மாதத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் கடலூர் ஆகிய ஐந்து டெல்டா மாவட்டங்களில் 1.27 இலட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த மாவட்டங்களில் மட்டும் 3.20 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்த ஆண்டு உற்பத்தி பெருமளவு அதிகரித்துள்ள காரணத்தினால் விவசாயிகளிடமிருந்து எவ்வித தாமதமுமின்றி நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் அதேசமயம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடன் இக்கூட்டம் நடத்தப்பட்டது.

Leave a Reply