செம்பரம்பாக்கம் ஏரி சுத்திகரிப்பு மையத்தில் இருந்து கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில், ரூ.66.78 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகர் மற்றும் சென்னை ஒட்டியுள்ள மாநகராட்சி, நகராட்சிகள் பேரூராட்சி பகுதிகளுக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். இந்த கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்தின் மூலம் செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தின் முழு அளவான நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்படும். இதன் மூலம் அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் மண்டலங்கள் மற்றும் ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகள், பூந்தமல்லி, திருவேற்காடு, குன்றத்தூர், மாங்காடு நகராட்சிகள், ஸ்ரீபெரும்புதூர், திருமழிசை பேரூராட்சிகளைச் சேர்ந்த சுமார் 20 லட்சம் பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.
அத்துடன் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றம் தொடர்பாக பொதுமக்கள் அழைக்கும் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், ‘’சென்னை குடிநீர்’’ என்ற புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து நகராட்சி நிர்வாகத்துறையில் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட ஐந்து பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
சி.கார்த்திகேயன்
