இந்திய கடற்படையைச் சேர்ந்த ஐஎன்எஸ் திர், ஐஎன்எஸ் ஷர்துல், இந்திய கடலோரக் காவல்படையின் ஐசிஜிஎஸ் சாரதி ஆகிய கப்பல்களை உள்ளடக்கிய முதல் பயிற்சிப் படையின் கப்பல்கள் செப்டம்பர் 04 அன்று சேஷெல்ஸின் விக்டோரியா துறைமுகத்திலிருந்து புறப்பட்டன. தொடர்ச்சியான நீண்ட தூர பயிற்சிப் பணிகளின் ஒரு பகுதியாக, இந்தக் கப்பல்கள் பயணம் மேற்கொண்டுள்ளன. சேஷெல்ஸில் நான்கு நாள் பயணத்தின் போது, இந்திய கடற்படை மற்றும் சேஷெல்ஸ் பாதுகாப்புப் படை இடையேயான கடல்சார் உறவுகள் வலுப்படுத்தப்பட்டன.
துறைமுகத்தில் நடைபெற்ற வரவேற்பின் போது, சேஷெல்ஸ் வெளியுறவு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு சில்வெஸ்ட்ரே ராடெகோண்டே மற்றும் பாதுகாப்புப் படைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் மைக்கேல் ரோசெட் ஆகியோர் பங்கேற்றனர். இந்தியா மற்றும் சேஷெல்ஸ் இடையேயான நீடித்த கூட்டாண்மையை அவர்கள் வலியுறுத்தினர். சேஷெல்ஸ் பாதுகாப்புப் படைகள் மற்றும் இந்திய ஆயுதப் படைகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்பும் வலியுறுத்தப்பட்டது.
வரவேற்பு நிகழ்ச்சியின்போது, சேஷெல்ஸ் பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரிகள், இந்திய வம்சாவளியினர் , தூதரக அதிகாரிகள் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். அங்கு நடைபெற்ற ஒருங்கிணைந்த யோகா அமர்வுகளில் உள்ளூர் மக்களும், இந்திய வம்சாவளியினரும் உற்சாகமாக பங்கேற்றனர்.
திவாஹர்
