தமிழக அரசு – நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளை காலதாமதம் செய்யாமல் அவ்வப்போதே கொள்முதல் செய்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசு, மாநிலத்தில் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல்மூட்டைகளை காலம் தாழ்த்தாமல் அவ்வப்போதே கொள்முதல் செய்ய வேண்டும்.
டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பயிர் செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்துள்ளனர் விவசாயிகள். நெல்கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்மூட்டைகளை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டு டன் கணக்கில் நெல்மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது.
குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டப் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உதாரணத்திற்கு திருவிடைமருதூர் தாலுகாவில் நெல்கொள்முதல் நிலையங்களில் 60,000 டன் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளதாலும், கும்பகோணம் பகுதியில் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளதாலும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது மழைக்காலம் என்பதால் சில நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்துள்ள நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் பல நெல்கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்துள்ள நெல்மூட்டைகள் மழை பெய்தால் நனைந்து வீணாகும் சூழல் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நெல்கொள்முதல் நிலையங்கள் திறந்த வெளி கிடங்குகளாக, வாடகைக் கட்டிடத்தில் இயக்கப்படுவதால் நெல்மூட்டைகளை கொள்முதல் செய்வதிலும், பாதுகாப்பதிலும் போதிய வசதிகள் இல்லை என்கின்றனர் விவசாயிகள்.
நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளை கொள்முதல் செய்து அங்கேயே வைத்திருப்பதால் தொடர்ந்து கொண்டுவரப்படும் நெல்மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாத அளவிற்கு இடப்பற்றாக்குறை உள்ளது. எனவே நெல்மூட்டைகளை அவ்வப்போது கொள்முதல் செய்து அங்கிருந்து சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும்.
பல நெல்கொள்முதல் நிலையங்களில் சாக்கு பைகள், தார் பாய்கள் தேவையான அளவிற்கு இருப்பில் இல்லாமல் இருப்பதும் முறையற்றது.
நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் நெல்மூட்டைகளைப் பாதுகாக்க தவறி உடனடியாக கொள்முதல் செய்யாமல் நெல்மூட்டைகளில் உள்ள நெல் மணிகள் தரையில் வீழ்ந்து வீணாகிறது. மேலும் நெல்லின் தரம் குறையவும் வாய்ப்புண்டு. இதனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் போகும் சூழலும் உருவாகும்.
லட்சக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்த லட்சக்கணக்கான விவசாயிகள் அறுவடை செய்து நெல்கொள்முதல் நிலையங்களுக்கு நெல்மூட்டைகளை கொண்டு சென்றாலும் நெல்மூட்டைகளை கொள்முதல் செய்வார்களா, பாதுகாப்பாக வைத்திருப்பார்களாக, உரிய விலை கொடுப்பார்களா என்ற நிலையிலே தான் விவசாயம் செய்கிறார்கள் விவசாயிகள்.
எனவே தமிழக அரசு, போதிய இட வசதியுடன் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் உள்ளதை, சாக்கு பைகள், தார் பாய்கள் தேவையான அளவிற்கு இருப்பில் இருப்பதை, உடனுக்குடன் கொள்முதல் செய்வதை தொடர் நடவடிக்கை மூலம் உறுதி செய்து கொண்டு விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கு துணை நிற்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்
