மத்திய மாநில அரசுகள் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும் மீட்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

இலங்கை கடற்படையினர் ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 14 பேரை கைது செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து நீடிப்பது பெரிதும் வேதனைக்குரியது.

நேற்று இரவு ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்களை நெடுந்தீவு அருகே இன்று காலை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர்.

அதே போல இன்று காலை பாம்பன் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர்.

இலங்கை கடற்படையினரின் இந்த அராஜகச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

இன்று ஒரே நாளில் மட்டும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 14 பேரை கைது செய்து, படகுகளை பறிமுதல் செய்ததால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், மீனவர்களின் உடமைகளை மற்றும் படகுகளை சேதப்படுத்துவதும், பறிமுதல் செய்வதும், அபராதம் விதிப்பதும் வழக்கமாகிவிட்டது.

கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் சுமார் 40-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

குறிப்பாக மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்வதும், அவர்களின் விலை உயர்ந்த படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்வதால் மீனவர்கள் வருவாய் ஈட்ட முடியாமல் மீனவக்குடும்பத்தினர் பெரிதும் சிரமப்படுகிறார்கள்.

இப்போது கடந்த 24 மணிநேரத்திற்குள் 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதால் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 14 தமிழக மீனவர்களையும் மீட்க உடனடி முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்டுள்ள மீனவக்குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் பேசி கைது செய்யப்பட்டுள்ள 14 தமிழக மீனவர்களையும், படகுகளையும் மீட்க வேண்டும்.

மேலும் மத்திய அரசு இலங்கையிடம் இனிமேல் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதையும் கண்டிப்போடு தெரிவிக்க வேண்டும்.

மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழிலுக்கு பாதுகாப்பு கொடுத்து மீனவக்குடும்பத்தினரின் நிம்மதியான வாழ்க்கைக்கு துணை நிற்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply