மத்திய அரசும், தமிழக அரசும் தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்கள் விளைநிலங்களைப் பாதிக்காத வகையில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
பாரத் பெட்ரோலியம் நிறுவனம், கோவை இருகூரிலிருந்து பெங்களூரு தேவனஹள்ளி வரை 340 கிலோமீட்டர் தொலைவுக்கு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இதில் ஒருபகுதி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாகவும், மற்றொரு பகுதி நெடுஞ்சாலை வழியாகவும் செல்கிறது.
ஏற்கனவே கோவை முதல் கரூர் வரையில் எண்ணெய் குழாயை விளைநிலப் பகுதிகளில் அமைத்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. எனவே விவசாயிகள், விளைநிலங்கள் வழியாக குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலை ஓரங்களில் பதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
குறிப்பாக விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதிப்பதால், நிலத்தின் மதிப்பு குறைவதுடன், விவசாய பணிகளை மேற்கொள்ள இயலாது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பொதுத்துறை வங்கிகள் கூட, நிலத்தை அடமானமாக வைத்து கடன் கொடுக்க மறுத்துவிடுகின்றன என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.
எனவே விவசாயிகள் சாலையோரம் குழாய் பதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
2013 ஆம் ஆண்டில் அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் எண்ணெய் குழாய்கள், எரிகாற்று குழாய்கள் அனைத்தும் சாலையோரமாக மட்டுமே அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் அடிப்படையில் கெயில் எரிகாற்று குழாய் திட்டமும், IDPL எண்ணெய் குழாய் திட்டமும், இந்தியன் ஆயில் எண்ணெய் குழாய் திட்டமும் சாலை ஓரமாக அமைக்கப்பட்டது.
ஆனால் தற்போது பாரத் பெட்ரோலியம் நிறுவனம் IDPL எண்ணெய் குழாய் திட்டத்தை விளைநிலப் பகுதிகளில் செயல்படுத்த உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் இருகூரிலிருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைத்து தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்து அதை நிறைவேற்றாமல், மீண்டும் மத்திய அரசிடம் உரிய அனுமதி பெறாமல் பழைய அனுமதியை வைத்துக்கொண்டு திட்டத்தை விளைநிலப்பகுதிகளில் நிறைவேற்ற முயற்சிப்பது முறையற்றது. கோவை, திருப்பூர் மாவட்டப் பகுதிகளில் எண்ணெய் குழாயை விளைநிலப்பகுதிகளில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 200 நாட்களாக அந்தந்த கிராமங்களில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எனவே மத்திய அரசு கோவை மாவட்டம் இருகூரிலிருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக அமைக்கப்பட உள்ள திட்டத்தையும், 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட திட்டத்தையும் சாலையோரமாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக முதலமைச்சர் அவர்களும் விவசாய நிலங்களில் குழாய் பதிக்கப்படாது என ஏற்கனவே உறுதியளித்ததால், அதை நிறைவேற்றும் வகையில் எண்ணெய் குழாய் பதிப்பு திட்டத்திற்கு விளைநிலங்களை தேர்வு செய்து கொடுக்காமல், சாலையோரப் பகுதிகளை ஒதுக்கி தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே மத்திய அரசும், தமிழக அரசும் கோவை மாவட்டம் இருகூர் முதல் திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை உள்ளிட்ட தமிழ்நாட்டில் எண்ணெய் குழாய் அமைப்பது சம்பந்தமாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் விடுத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகின்றேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
