தமிழகத்தின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களை இன்று இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் கைது செய்து, மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் தமிழக மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் வருமானம் ஈட்டுவதற்காக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதும், இலங்கை கடற்படையினர் தொடர்ந்து மீனவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும், தமிழக மீனவக்குடும்பத்தினருக்கு வருவாய் கிடைக்காமல் பாதிக்கப்படுவதும் தொடர்கிறது.
மேலும் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவதால் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் நலிவடைந்து போகிறது.
இந்நிலையில் தமிழக மீனவர்கள் தங்களுடைய எதிர்ப்புகளை மத்திய மாநில அரசுகளுக்கு தொடர்ந்து தெரிவித்தும் இன்னும் சுமூகத் தீர்வு ஏற்படவில்லை என மீனவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை மத்திய மாநில அரசுகள் கண்டிப்பதோடு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.
மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் பேசி கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்களையும், படகையும் மீட்க வேண்டும். மேலும் மத்திய அரசு இனிமேல் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதை இலங்கை அரசிடம் கண்டிப்போடு தெரிவிக்க வேண்டும்.
மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு உரிய பாதுகாப்பு கொடுத்து மீனவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்
