மதுக்கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசு சிறார்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் என அனைத்து தரப்பு மக்களின் நல்வாழ்விற்காக மதுக்கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழக அரசு, இனியும் காலம் தாழ்த்தாமல் மதுக்கடைகளை படிப்படியாக மூடி தமிழக மக்கள் மதுவால் பாதிக்கப்படமாட்டார்கள் என்ற நிலையை காலம் தாழ்த்தாமல் ஏற்படுத்த வேண்டும்.

காரணம் சிறார்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் ஆகியோர் மதுபான பழக்கத்திற்கு உட்படுவது அதிகமாகி வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக மதுபானத்தால் பல அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளது.

தற்போது கூட விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிபோதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து மதுபாட்டிலால் ஆசிரியரை தாக்கியதில் ஆசிரியர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த அசம்பாவிதத்திற்கு அடிப்படைக்காரணம் மதுபானமே. இது தொடர்பாக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மாணவர்களின் வருங்கால நல்வாழ்விற்கு வழி வகுக்க மதுபானக் கடைகள் இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிவகாசியில் ஆசிரியரை மதுபோதையில் இருந்த மாணவர்கள் தாக்கிய கொடூரச் சம்பவமும் சட்டம் ஒழுங்கிற்கு சீர்கேடே.

மாணவர்களின் தவறான நடவடிக்கைகளுக்கு காரணம் மதுக்கடைகள் ஆங்காங்கே திறந்திருப்பதும், மதுபானங்களை வாங்க தடையேதும் இல்லாத நிலையே.

      மாணவர்கள் நன்கு கல்வி கற்கவும், ஆசிரியர்கள் கல்வியை கற்றுத்தரவும் நல்ல சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய தமிழக அரசு மதுக்கடைகளை திறந்து வைத்து மாணவர்களின் தீயப்பழக்கத்திற்கு வழிவகுப்பது முறையற்றது.

      கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை, இரணியல் சாலையில் அமைந்துள்ள மதுபானக்கூடத்திற்கு சென்ற 3 சிறார்கள் மது அருந்தியுள்ளனர். 

     தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுகூடங்களில்) விதிகள் 2003, விதி எண் 11 ஏ-யின் படி, 21 வயது நிரம்பாவதர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது எப்படி இந்த சிறார்களுக்கு மதுவை விற்பனை செய்தார்கள். விதியை முறையாக கடைபிடிக்கவில்லை என்பது தெரிகிறது.

     தமிழக அரசு மது விற்பனையால் பல கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டு, மதுவால் சிறார்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் பாதிக்கப்படுவதை அலட்சியப்படுத்துவது கொடுமையிலும் கொடுமை.

மதுவால் கிடைக்கும் வருவாயானது ஆட்சியாளர்களுக்கு மட்டுமே சாதகமாக அமைந்து மக்களின் உடல்நலத்திற்கும், இளைய தலைமுறையினரின் எதிர்காலத்திற்கும், சட்டம் ஒழுங்கிற்கும் பாதகமாக அமைந்துள்ளது.
இந்த அவலநிலைக்கு காரணம் தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் டாஸ்மாக் கடைகளுக்கு யார் வேண்டுமானாலும் சென்று மதுவை வாங்கிக் குடிக்கலாம், தகராறு செய்யலாம், பிரச்சனைகளுக்கு வழி வகுக்கலாம் என்பதே.

இதனால் மதுப்பழக்கம் அதிகமாகும் சூழலே ஏற்பட்டுள்ளது. மேலும் சமூகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு தீமைகளுக்கு மதுபானங்கள் காரணமாக அமைகின்றன.

எனவே தமிழக அரசே ஏழைக்குடும்ப சிறார்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் உடல்நலனிலும், எதிர்கால சமுதாயத்தினரின் நல்வாழ்க்கையிலும் அக்கறை இருக்குமேயானால் மதுக்கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு, நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply