பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (ஜூலை 18 – ம் தேதி) பீகார், மேற்கு வங்க மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். காலை 11:30 மணியளவில், பீகாரில் உள்ள மோதிஹரியில் ரூ.7,200 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்றத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார், பின்னர் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகிறார்.
இதனையடுத்து, மேற்கு வங்க மாநிலத்திற்குச் செல்லும் பிரதமர், பிற்பகல் 3 மணியளவில் துர்காபூரில் ரூ.5000 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்து உரையாற்றுகிறார்.
பீகாரில் பிரதமர்
ரயில், சாலை, கிராமப்புற மேம்பாடு, மீன்வளம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கான தேசிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்றத் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கிறார்.
போக்குவரத்துக்கான இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், பிரதமர் பல்வேறு ரயில் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கிறார். இதில் சமஸ்திபூர்-பச்வாரா இடையேயான ரயில் வழித்தடத்தில் தானியங்கி சமிக்ஞை கருவிகளை அமைக்கும் பணிகளும் அடங்கும். இது இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து சேவைகளை திறம்பட மேற்கொள்வதற்கு வகை செய்கிறது. தர்பங்கா-சமஸ்திபூர் இடையே இரட்டை வழித்தடம் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.580 கோடிக்கு கூடுதல் செலவில், தர்பங்கா-தல்வாரா, சமஸ்திபூர்-ராம்பத்ரபூர் இடையே இரட்டை வழித்தடம் அமைப்பது என்பது, ரயில் போக்குவரத்து சேவையின் திறனை அதிகரிக்க உதவுவதுடன், கால தாமதங்களையும் வெகுவாக குறைக்கும்.
பாடலிபுத்ராவில் வந்தே பாரத் ரயில்களைப் பராமரிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாட்டுத் திட்டங்களும் இதில் அடங்கும். பட்னி-சாப்ரா கிராமின் ரயில் வழித்தடத்தில் (114 கி.மீ) தானியங்கி சமிக்ஞை கருவிகளை பொருத்துவது சீரான ரயில் போக்குவரத்திற்கு உதவிடும். இந்த வழித்தடத்தில் இழுவை அமைப்பை மேம்படுத்தி, அதன் உள்கட்டமைப்பு வசதியை வலுப்படுத்துவதன் வாயிலாக எரிசக்தித் திறன் மேம்பட வழி வகுக்கும். இது ரயிலின் செயல்திறனை அதிகரிக்கச் செய்வதுடன், அதன் வேகத்தையும் அதிகரிக்க உதவிடும். தர்பங்கா-நர்கதியாகஞ்ச் இடையேயான ரயில் பாதை இரட்டிப்பாக்கும் திட்டம் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களை இயக்கவும், வடக்கு பீகார் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு இடையே ரயில் போக்குவரத்துக்கான இணைப்பை வலுப்படுத்தவும் ரூ.4,080 கோடி மதிப்பிலான திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
இம்மாநிலத்தில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், பிரதமர் தேசிய நெடுஞ்சாலை எண் – 319 – ல் உள்ள ஆரா புறவழிச்சாலையில், ஆரா – மோஹானியா இடையே 4-வழிச் சாலை அமைக்கும் திட்டத்திற்கும், பாட்னா-பக்சர் இடையே நெடுஞ்சாலை எண் – 922 – ஐ இணைக்கும் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இது இப்பகுதியில் தடையற்ற போக்குவரத்துக்கான இணைப்பை வழங்குவதுடன், பயண நேரத்தையும் கணிசமான அளவில் குறைக்கிறது.
தேசிய நெடுஞ்சாலை எண் – 319 – ல் பராரியா – மோஹானியா வரையிலான 4-வழிச் சாலையையும் பிரதமர் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கிறார். இது அரா நகரத்தை தேசிய நெடுஞ்சாலை எண் – 02 (தங்க நாற்கரம்) சாலையுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் – 319 திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டம், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு உதவிடும். இவைதவிர, தேசிய நெடுஞ்சாலை எண் – 333சி – ல், சர்வான் – சக்காய் இடையே நடைபாதையுடன் கூடிய 2-வழிப்பாதை அமைக்கப்பட உள்ளது. இது சரக்குகள் மற்றும் மக்களின் போக்குவரத்தை எளிதாக்குவதுடன், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு இடையே ஒரு முக்கியதத்துவம் வாய்ந்த போக்குவரத்துக்கான இணைப்பாக செயல்படும்.
தர்பங்காவில் புதிய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவையும், தகவல் தொழில்நுட்பம், அது சார்ந்த சேவைகள், மின்னணுவியல் அமைப்பு முறை, வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், பாட்னாவில் மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா அமைந்துள்ள வளாகத்தில் அதிநவீன தொடக்கநிலை மென்பொருள் மேம்பாட்டு ஆலையையும் பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த வசதிகள் தகவல் தொழில்நுட்ப மென்பொருள், சேவை ஏற்றுமதிகளை அதிகரிக்க உதவிடும். இது வளர்ந்துவரும் தொழில்முனைவோருக்கு தொழில்நுட்ப நிறுவனங்களைத் தொடங்குவதற்கான சூழலை வளர்ப்பதுடன், புதுமை கண்டுபிடிப்புகள், அறிவுசார் சொத்துரிமை, உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஆகியவற்றை மேம்படுத்தும்.
பீகாரில் மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்புத் துறையை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்த்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள தொடர்ச்சியான மீன்வள மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் புதிய மீன் குஞ்சு பொரிப்பகங்கள், உயிரித் தொகுதிக்கான அலகுகள், அலங்கார மீன் வளர்ப்பு, ஒருங்கிணைந்த மீன்வளர்ப்பு அலகுகள், மீன்களுக்கான தீவன உற்பத்தி ஆலைகள் உள்ளிட்ட நவீன மீன்வள உள்கட்டமைப்பு வசதிகளைத் தொடங்க வகை செய்கிறது. மீன்வளர்ப்புத் திட்டங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், அம்மாநில கிராமப்புறங்களில் சமூக-பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தவும் உதவிடும்.
திவாஹர்
