தமிழக அரசு துப்புரவு தொழிலாளர்களின் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழ்நாட்டின் கிராமப்புற துப்புரவு தொழிலாளர்களும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களும் குறைந்தபட்சக் கூலி மறுக்கப்படுவதாக தெரிவிப்பது தமிழக அரசின் மனிதாபிமானமற்ற ஆட்சியை வெளிப்படுத்துகிறது.

கிராம ஊராட்சிகளின் சுகாதாரம் பேண துப்புரவு பணியாளர்களும், குடிநீர் வினியோகம் செய்ய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களும் என சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

உள்ளாட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை (2D) எண்.62 நாள்:11.10.2017 வெளியிட்டது. அதன்படி துப்புரவுப் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 6000/-அடிப்படை சம்பளம் ரூ. 5029/- அகவிலைப்படி சேர்த்து ரூ. 11,029/- ம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவருக்கு ரூ. 13,029/- ம் ஊதியம் வழங்க வேண்டும்.

ஆனால் இத் தொழிலாளர்களை பகுதிநேர தொழிலாளர்கள் என்று தமிழக அரசு கூறி வருகிறது. நேரம் காலம் இல்லாமல் 10 மணி நேரம் வரை இவர்களை வேலை வாங்கினாலும் பகுதிநேர தொழிலாளர்களாகத் தான் கருதப்படுகிறார்கள். அதனால் நாள் ஒன்றுக்கு அரை நாள் ஊதியம் தான் என்பது அரசின் கூற்று. இதன்படி துப்புரவு தொழிலாளிக்கு மாதம் ரூ. 5515/- மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குவதற்கு 6515/- வழங்க வேண்டும். இந்தத் தொகையாவது வழங்கப்படுகிறதா எனில் அதுவுமில்லை.

இது தொடர்பாக பல வழக்குகள் நடைபெற்று, நீதிமன்ற உத்தரவு வழங்கிய பின்னரும் ஏராளமான உத்தரவுகள் அமுலாக்கப்படவில்லை.

ஐந்தாண்டுக்கு ஒரு முறை மறு நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியம் 70 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே அறிவிக்கப்பட்டது அதுவும் அமுலாகவில்லை என்பது வேதனைக்குரியது. கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக பணி நிரந்தரம் செய்து; காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், முழுநேர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என இத்தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மூன்று ஆண்டுகள் பணி முடித்தால் காலமுறை ஊதியம் வழங்கவும், 10 ஆண்டுகள் பணி முடித்தால் பணி நிரந்தரம் செய்யவும் அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் படி தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்து உத்தரவு வழங்கியதாக தெரியவில்லை.

தூய்மைப் பணியாளர்களுக்கு ரூபாய் ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். 9 மாதங்கள் கழித்து அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இன்றைக்கும் பல இடங்களில் இந்தத் தொகை வழங்கப்படவில்லை.

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்களுக்கு ரூ. 1,400/- உயர்த்தி மாதம் ரூ.4,000/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கும் 10 மாதங்கள் கழித்துதான் அரசாணை வெளியிடப்பட்டது. இதுவும் இன்னும் முழுமையாக அமுலாக்கப்படவில்லை. கிராம ஊராட்சி தொழிலாளிக்கு விடியல் எப்போது என்ற கேள்விக்கு விடை மட்டும் இதுவரை கிடைக்கவே இல்லை இந்த தி.மு.க ஆட்சியில்.

எனவே தமிழக அரசு துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் ஆகியோரின் அவசியப் பணியை கவனத்தில் கொண்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply