பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வாக்குச் சாவடி நிலை அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள், தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் போன்றவர்கள் தகுதியான வாக்காளர்கள் யாரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக பணியாற்றி வருகின்றனர்.

பீகாரில் 2025 ஜூன் 24 நிலவரப்படி பதிவு செய்யப்பட்ட 7,89,69,844 (கிட்டத்தட்ட 7.90 கோடி) வாக்காளர்களிடமிருந்து இன்றைய நிலவரப்படி 1,04,16, 545 கணக்கெடுப்பு படிவங்கள் அதாவது 13.19 சதவீதம் பெறப்பட்டுள்ளன. விநியோகிக்கப்பட்ட படிவங்களின் எண்ணிக்கை 93.57 சதவீதமாக உயர்ந்துள்ளது. 7,38,89,333 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

77,895 வாக்குச் சாவடி நிலை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்கள் ஆய்வுப் படிவங்களை நிரப்ப உதவுகிறார்கள். பல இடங்களில், வாக்குச் சாவடி நிலை அதிகாரிகள் வாக்காளர்களின் படங்களை நேரடியாக எடுத்துப் பதிவேற்றுகிறார்கள்.

படிவங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளமான https://voters.eci.gov.in தளத்திலும், இசிஐஎன்இடி (ECINET) செயலியிலும் உள்ளன. அவற்றைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் நிரப்பப்பட்ட படிவங்களை வாக்காளர்கள் தாங்களே இசிஐஎன்இடி செயலியில் பதிவேற்றலாம்.

இந்த செயல்முறையை சுமுகமாகவும் சரியான நேரத்தில் முடிப்பதற்காக 20,603 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகள், தேசிய மாணவர் படையினர், சாரணர் இயக்க உறுப்பினர்கள் உள்பட கிட்டத்தட்ட 4 லட்சம் தன்னார்வலர்கள், இந்த வாக்காளர் பட்டியல் திருத்த செயல்பாட்டில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் போன்றவர்களுக்கு உதவ, களத்தில் பணியாற்றி வருகின்றனர்.

பல்வேறு அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட 1,54,977 வாக்குச் சாவடி நிலையிலான முகவர்களும் இந்த செயல்பாட்டிற்குத் தீவிர ஆதரவை வழங்கி வருகின்றனர்.

Leave a Reply