வடகிழக்குப் பகுதியில் கனிமங்கள் மற்றும் நிலக்கரித் தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும்! – மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி.

வடகிழக்கு மாநிலங்களில் கனிம மற்றும் நிலக்கரித் தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி கூறியுள்ளார். வடகிழக்கு மாநிலங்களின் கனிம வள அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டத்தின் 2-வது நாள் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், சுரங்க உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், திட்ட ஒப்புதல்களை விரைவுபடுத்துதல், பிராந்தியத்தில் நிலையான சுரங்க நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார்.

வடகிழக்குப் பகுதியின் வளர்ச்சியானது வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார். அசாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய எட்டு மாநிலங்கள் அஷ்ட லட்சுமியாகக் கொண்டாடப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், முதலீட்டை ஈர்ப்பதற்கும், கனிம மற்றும் நிலக்கரி துறை மேம்பாட்டிற்கு உதவுவதற்கும், மத்திய-மாநில அரசுகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு முக்கியம் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

இந்த மாநாட்டின் போது, எட்டு வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதிகள் சுரங்க மற்றும் நிலக்கரி துறைகளை முன்னேற்றுவதற்கான தங்கள் திட்டங்களை முன்வைத்தனர். மேகாலயா, அசாம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், தங்களது மாநிலத்திற்குரிய எதிர்காலத் திட்டங்களை எடுத்துரைத்தனர். நிலக்கரி சுரங்கத் தொகுதி ஏலங்கள், முக்கியமான கனிமங்களை ஆராய்தல் ஆகியவற்றில் தங்களது மாநிலத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். பொருளாதார வளர்ச்சியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை சமநிலைப்படுத்துவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இந்த விவாதங்கள் பிரதிபலித்தன.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, நிலையான வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பு, பொருளாதார மாற்றம் ஆகிய தேசிய செயல்திட்டங்களுடன் பிராந்திய சுரங்க உத்திகளை இணைப்பதற்கான ஒரு முக்கிய தளமாக இந்த இரண்டு நாள் மாநாடு அமைந்தது.

மாநாட்டின் ஒரு பகுதியாக, மத்திய சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, குவஹாத்தியில் இந்திய சுரங்க அலுவலகத்தின் (IBM) புதிய பிராந்திய அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அசாம் சுரங்க அமைச்சர் திரு கௌசிக் ராய் முன்னிலையில் இந்தத் திறப்பு விழா நடைபெற்றது.

Leave a Reply