மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு. அமித் ஷா, இன்று சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் (NFSU) மற்றும் மத்திய தடய அறிவியல் ஆய்வகம் (CFSL) வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ராய்ப்பூரில் உள்ள NFSU-வின் தற்காலிக வளாகத்தையும் மெய்நிகர் முறையில் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், சத்தீஸ்கர் முதல்வர் திரு. விஷ்ணு தியோ சாய், மத்திய உள்துறை செயலாளர் மற்றும் புலனாய்வுப் பணியகத்தின் இயக்குநர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு. அமித் ஷா தனது உரையில், சத்தீஸ்கரின் குற்றவியல் நீதி அமைப்பை நவீனமயமாக்க மூன்று புதிய முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளதால், இன்று அதற்கு மிக முக்கியமான நாள் என்று கூறினார். இந்த மூன்று முயற்சிகளும், வரும் நாட்களில் சத்தீஸ்கருக்கு மட்டுமல்ல, மத்திய இந்தியாவின் முழு குற்றவியல் நீதி அமைப்புக்கும் ஒரு அடித்தளமாக செயல்படும் என்று அவர் கூறினார்.
சத்தீஸ்கரில் இன்று i-HUB-ன் தொடக்க விழா நடைபெறும் என்றும் திரு. அமித் ஷா கூறினார். சத்தீஸ்கர் இளைஞர்கள் MSME தொழில்முனைவோராக மாறி தங்கள் சொந்த ஸ்டார்ட்அப்களை உருவாக்குவதால், அது மாநிலத்தில் அதிக முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், சத்தீஸ்கரின் தொழில்துறை புரட்சியை நோக்கிய பயணத்தை துரிதப்படுத்தும் என்றும் அவர் கூறினார். i-HUB தொடங்கப்பட்டதன் மூலம், சத்தீஸ்கர் இளைஞர்கள் ஒரு குறிப்பிடத்தக்க தளத்தைப் பெறுகிறார்கள் என்றும் அவர் கூறினார். ₹145 கோடி செலவில் NFSU வளாகமும், ₹123 கோடியில் CFSL வசதியும் இங்கு நிறுவப்படுவதாகவும், மொத்தம் ₹268 கோடி முதலீட்டில் அமைக்கப்படுவதாகவும் திரு. ஷா குறிப்பிட்டார். இந்த வழியில், நியூ ராய்ப்பூரில் முன்னணி தடயவியல் நிறுவனங்கள் இப்போது அமைக்கப்படும். NFSU-வில் பட்டம் பெறுவது என்பது உத்தரவாதமான வேலை என்றும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளில் சத்தீஸ்கரின் முன்னேற்றத்திற்கு NFSU பங்களிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
திவாஹர்
